×

உக்ரைனை உலுக்கியெடுத்து அசத்தல்: உலகக்கோப்பை கால்பந்து தகுதி பெற்றது பிரான்ஸ்

பாரிஸ்: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2026 போட்டிக்கு, பிரான்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.
வரும் 2026ல், அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில், ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. குரூப் டி பிரிவில் நேற்று நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் – உக்ரைன் அணிகள் மோதின.

போட்டியின் துவக்கம் முதல் அபாரமாக செயல்பட்ட பிரான்ஸ் அணி கடைசி வரை ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் கேப்டன் கைலியன் எம்பாபே அற்புதமாக ஆடி 2 கோல்களை அடித்து அசத்தினார். தவிர, மைக்கேல் ஒலிசே, ஹியுகோ எகிடிகேல, பிரான்ஸ் அணிக்காக 2 கோல்களை அடித்தனர். மாறாக, உக்ரைன் வீரர்கள் ஒரு கோல் கூட போட முடியாமல் தவித்தனர். கடைசியில், 4-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அற்புதமான வெற்றியை பதிவு செய்தது.

இதன் மூலம், குரூப் டி-யில் பிரான்ஸ், 13 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. இந்த பிரிவில் ஐஸ்லேண்ட், உக்ரைன் அணிகள் தலா 7 புள்ளிகளுடன் 2 மற்றும் 3ம் இடங்களில் உள்ளன. இவற்றை விட, பிரான்ஸ் 6 புள்ளிகள் முன்னிலை பெற்று முதலிடத்தில் உள்ளதால், 2026 ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்று அசத்தி உள்ளது. கடந்த 1994ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான தகுதிப் போட்டிகளின் முடிவில், அமெரிக்காவிடம் நூலிழையில் வாய்ப்பை பறிகொடுத்த பிரான்ஸ், அதன் பின் நடந்த அனைத்து போட்டிகளிலும் ஆடி வருகிறது. தவிர, 2018ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. 2022ல் நடந்த போட்டியில் 2ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Ukraine ,France ,World Cup ,Paris ,2026 FIFA World Cup ,United States ,Mexico ,Canada ,
× RELATED ஹெச்சிஎல் ஸ்குவாஷ்: வேலவன் சாம்பியன்