×

டெல்லியை வீழ்த்தி அபாரம்: ரஞ்சி கோப்பை வரலாற்றில் சாதித்த ஜம்மு காஷ்மீர்

புதுடெல்லி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் எலைட் பிரிவு டெஸ்ட் போட்டியில் நேற்று, டெல்லி அணியை, ஜம்மு காஷ்மீர் அணி முதல் முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 2வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. டெல்லியில் கடந்த 8ம் தேதி, எலைட் குரூப் டி பிரிவில் துவங்கிய போட்டியில் டெல்லி-ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் டெல்லி 211 ரன்களும், ஜம்மு காஷ்மீர் 310 ரன்களும் எடுத்தன.

பின் 2வது இன்னிங்சை ஆடிய டெல்லி 277 ரன்களுக்கு வீழ்ந்தது. அதையடுத்து, 179 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஜம்மு காஷ்மீர் களத்தில் குதித்தது. துவக்க வீரராக களமிறங்கிய கம்ரான் இக்பால் ஒன்மேன் ஆர்மியாக, டெல்லி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து ரன்களை குவித்தார். 147 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்சர், 20 பவுண்டரிகளுடன் 133 ரன் விளாசினார்.

மற்றொரு துவக்க வீரர் சுக்பம் கஜுரியா 8, பின் வந்த விவ்ரன்ட் சர்மா 3, வன்ஷஜ் சர்மா 8 ரன் எடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இருந்தும் நங்கூரமாய் நின்று கடைசி வரை ஆட்டமிழக்காமல் கம்ரான் ஆடியதால், 43.3 ஓவரில் ஜம்மு காஷ்மீர் 179 ரன்கள் எடுத்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. 65 ஆண்டுகால ரஞ்சி கோப்பை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த அணியான டெல்லியை, முதல் முறையாக வென்று ஜம்மு காஷ்மீர் புதிய சகாப்தம் படைத்துள்ளது.

Tags : Jammu and Kashmir ,Delhi ,Ranji Trophy ,New Delhi ,Jammu and ,Kashmir ,Ranji Trophy Elite Group Test ,
× RELATED ஹெச்சிஎல் ஸ்குவாஷ்: வேலவன் சாம்பியன்