×

கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடம்

நாமக்கல், நவ.12: நாமக்கல் ஆவின் நிறுவனத்தில், தற்காலிக அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்), தற்போது 499 பிரதம சங்கங்களின் மூலம் சராசரியாக 1.55 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு அனைத்து மருத்துவ வசதிகள் கிடைக்கவும், அதன் மூலம் மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, பாரத் சஞ்சீவினி செயலி மூலம், கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, தற்போது காலியாகவுள்ள 9 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்துக்கு, 11 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற ஆவின் நிர்வாக அதிகாரியால், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில், தற்காலிகமாக பணியாற்ற விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் (50 வயதுக்குள்) தங்களை பற்றிய முழுவிவரங்களுடனும், உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும், வரும் 17ம் தேதி காலை 11 மணிக்கு நாமக்கல் – மோகனூர் சாலை, கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள பொதுமேலாளர் அலுவலகத்தில் நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம். தகுதியானோர் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும். இப்பணியிடத்துக்கு ஊதியமாக ரூ.80,500, கல்வித்தகுதியாக பி.வி.எஸ்சி அண்டு ஏ.ஹெச், கணினி துறையில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் இயக்கவும், டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Namakkal ,Namakkal Aavin ,Namakkal District ,Collector ,Durga Murthy ,Namakkal District Cooperative Milk Producers Union ,Aavin ,
× RELATED சந்து கடையில் மது விற்ற 2 பேர் கைது