ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் ரத்து கோரி கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்டு போராட்டம்

மதுரை, ஜன. 5: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 179 பேர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2017ம் ஆண்டில் உச்சநீதிமன்ற தடையால், ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த தடையை அகற்ற கோரி மதுரை தல்லாகுளம், செல்லூர், அவனியாபும், அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் தன்னெழுச்சி போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 179 பேர் மீது 8 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். இந்த வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். பொங்கலை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலப்பின மாடுகளை அவிழ்த்து விடக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு முறியடிப்பு குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் செல்வராஜன், குமரன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முகிலன் உள்ளிட்டோர் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து கோரிக்கைகள் குறித்த முழக்கங்களை எழுப்பினர். போலீசார் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என கூறியதை தொடர்ந்து, அவர்கள் கலெக்டரிடம் மனு வழங்கினர். மனுவை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என கூறினார். இந்த போராட்டத்தால், கலெக்டர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: