×

டபிள்யுடிஏ பைனல்ஸ் டென்னிஸ் சபலென்காவை வீழ்த்தி சாம்பியனான ரைபாகினா

ரியாத்: டபிள்யுடிஏ பைனல்ஸ் டென்னிஸ் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்காவை வீழ்த்தி, கஜகஸ்தான் வீராங்கனை ரைபாகினா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கடந்த ஒரு ஆண்டில் சிறப்பாக ஆடி வரும் டாப் 8 வீராங்கனைகள் மட்டும் மோதும் டபிள்யுடிஏ பைனல்ஸ் போட்டிகள், சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வந்தன. மகளிர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டி ஒன்றில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை வீழ்த்தி, உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரீனா சபலென்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரை இறுதியில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலாவை வீழ்த்திய, கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப் போட்டியில் சபலென்கா – ரைபாகினா மோதினர். போட்டியின் துவக்கம் முதல் ரைபாகினாவின் கை ஓங்கிக் காணப்பட்டது. முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் அவர் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் இரு வீராங்கனைகளும் சளைக்காமல் போராடியதால் டைபிரேக்கர் வரை போட்டி நீண்டது.

கடைசியில் அந்த செட்டை, 7-6 (7-0) என்ற புள்ளிக் கணக்கில் ரைபாகினா கைப்பற்றி 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடினார். இதன் மூலம் டபிள்யுடிஏ பைனல்ஸ் சாம்பியன் பட்டத்தை அவர் கைப்பற்றினார். இறுதிச் சுற்றில் வென்ற ரைபாகினாவுக்கு 900 புள்ளிகள் கிடைத்தன. தவிர, மற்ற சுற்று போட்டிகள் மூலம் அவருக்கு 600 புள்ளிகள் கிடைத்தன. அதனால், டபிள்யுடிஏ டென்னிஸ் தரவரிசையில் 5583 புள்ளிகளுடன் ரைபாகினா, 5ம் இடத்துக்கு முன்னேறினார். தவிர, ரைபாகினாவுக்கு ரூ. 45 கோடி பரிசும் வழங்கப்பட்டது.

 

Tags : Rybakina ,Sabalenka ,WTA Finals ,Riyadh ,Kazakhstan ,Aryna Sabalenka ,WTA Finals tennis final ,
× RELATED ஹெச்சிஎல் ஸ்குவாஷ்: வேலவன் சாம்பியன்