புதுடெல்லி: கடந்த ஆண்டு நடந்த அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் ஆதாரங்களுடன் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். அதில் முக்கியமாக பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி மாத்யூஸ் பெரோரோ என்பவர் 22 கள்ள ஓட்டுக்களை போட்டதாக ராகுல் கூறினார். பிரேசில் பெண்ணின் புகைப்படத்துடன் சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி என பல பெயர்களில் 22 வாக்காளர்கள் இடம் பெற்றிருக்கும் வாக்காளர் பட்டியலையும் திரையில் காட்டினார்.
இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற புகைப்படத்தில் உள்ள பிரேசில் பெண் அவரது சமூக ஊடக தளத்தில் வீடியோ வெளியிட்டு நேற்று விளக்கம் அளித்துள்ளார். அவரது பெயர் லாரிசா நேரி. அவர் கூறுகையில், ‘‘அது என்னுடைய பழைய புகைப்படம். 18-20 வயதில் எடுத்த புகைப்படம். இந்த விவகாரம் தேர்தல் அல்லது வாக்களிப்பது குறித்ததா என்பது எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் என்னை இந்தியராக சித்தரித்து ஏமாற்றுகிறார்கள்.
என்ன முட்டாள்தனம்? என்ன மாதிரியான உலகத்தில் நாம் வாழ்கிறோம். இந்த சம்பவத்திற்கு பின் பலரும் எனது சமூக ஊடக கணக்கை தொடர்பு கொண்டனர். சமூக ஊடகம் மூலம் என்னை தொடர்பு கொண்ட ஒரு பத்திரிகையாளர் பேட்டி தர வேண்டுமென கூறினார். நான் பதிலளிக்கவில்லை. முதலில் நான் மாடல் கிடையாது. அந்த புகைப்படம் நண்பர் ஒருவர் எடுத்தது. என்னுடைய அனுமதியுடன் அதை ஆன்லைனில் பகிர்ந்தார். அதை இந்தியாவில் தவறாக பயன்படுத்தி உள்ளனர்’’ என்றார்.
இதே போல, ராகுல் காந்தி காட்டிய வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண்ணின் புகைப்படத்துடன் இருந்த வாக்காளர்களில் ஒருவரான சோனிபட் மாவட்டத்தின் மச்ரோலி கிராமத்தை சேர்ந்த பிங்கி என்பவர் தனது வாக்கு திருடப்படவில்லை என கூறி உள்ளார். 2019ல் வாக்கு பதிவு செய்த போது தவறான புகைப்படத்துடன் அடையாள அட்டை வழங்கப்பட்டதாகவும் பின்னர் அந்த புகைப்படத்தை திருத்த மனு செய்ததாகவும் பிங்கி தெரிவித்துள்ளார். அதன் பிறகு தற்போது வரையிலும் திருத்தப்பட்ட புதிய புகைப்பட அடையாள அட்டை கிடைக்காததால் ஒவ்வொரு தேர்தலிலும் பூத் சிலிப் மற்றும் ஆதார் அட்டையை காட்டி வாக்களித்துள்ளதாக அவர் விளக்கி உள்ளார்.
