×

பீகாரில் உபி முதல்வர் பிரசாரம் இந்தியா கூட்டணியில் 3 குரங்குகள் உள்ளன: நல்லதை பார்க்க, கேட்க, பேச முடியாது

தர்பங்கா: ‘‘ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் இந்தியா கூட்டணியின் 3 குரங்குகள். அவர்களால் தேசிய ஜனநாயக கூட்டணி செய்து வரும் நல்ல வேலைகளை பார்க்க, கேட்க, பேச முடியாது’’ என பீகார் பிரசாரத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். பீகாரில் முதல் கட்ட தேர்தல் நாளை மறுதினம் நடக்க உள்ள நிலையில் நேற்று இறுதிகட்ட பிரசாரம் அனல் பறந்தது. உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தர்பங்கா, முசாபர்பூர், சரண் மாவட்டங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது: மகாத்மா காந்தியின் 3 குரங்குகள், எந்த தீமையையும் பார்க்கவில்லை, பேசவில்லை, கேட்கவில்லை. இப்போது இந்தியா கூட்டணியிலும் 3 குரங்குகள் உள்ளன. அவை பப்பு (ராகுல் காந்தி) – தேசிய ஜனநாயக கூட்டணியின் நல்ல வேலைகளை பார்க்க முடியாது, தப்பு (தேஜஸ்வி யாதவ்) – அவற்றை கேட்க முடியாது, அப்பு (அகிலேஷ் யாதவ்) – நல்ல வேலைகள் பற்றி பேசுவதை ஒப்புக் கொள்ளாது. காங்கிரஸ், ஆர்ஜேடி, சமாஜ்வாடி ஆகியவை பீகாரில் குற்றவாளிகளை உடன் சேர்த்துக் கொண்டு, மாநிலத்தின் பாதுகாப்பை சமரசம் செய்து, ஊடுருவல்காரர்களை அனுமதித்தன. பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஊடுருவல்காரர்களை மாநிலத்தில் இருந்து வெளியேற்றி, அவர்களின் செல்வதை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கும். சாதியின் பெயரால் மக்களை பிரித்து கலவரங்களை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிடுகின்றன. நாம் பிரிக்கப்படவோ, ஒருவருக்கொருவர் சண்டையிடவோ மாட்டோம் என தீர்மானிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

* அனுமனை அவமதித்துவிட்டார்
யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு பதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, ‘‘அவர் ஒரு யோகி, ஆனால் அவரே அனுமனை அவமதித்துள்ளார். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.

Tags : UP ,CM ,Bihar ,India alliance ,Darbhanga ,Rahul Gandhi ,Tejashwi Yadav ,Akhilesh Yadav ,National Democratic Alliance'' ,Yogi ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...