×

பட விளம்பரத்திற்காக சாலையில் விபரீத சாகசம்; ‘டைட்டானிக்’ போஸ் கொடுத்து சிக்கிய நடிகை: மூத்த நடிகர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு

அகமதாபாத்: திரைப்பட விளம்பரத்திற்காக சாலையில் ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட பிரபல குஜராத்தி நடிகர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. குஜராத் மாநில நடிகர்களான டிகு தல்சானியா, பிரேம் காத்வி, நடிகை மான்சி பரேக் ஆகியோர், தங்களது புதிய திரைப்படமான ‘மிஸ்ரி’-யை விளம்பரப்படுத்தும் நோக்கில், அகமதாபாத் சாலையில் ஆபத்தான பைக் சாகசத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் நேற்று முன்தினம் மாலையில், பைக்கின் மீது நின்றபடி நடிகை மான்சி பரேக் ‘டைட்டானிக்’ போஸ் கொடுத்ததும், மற்றவர்கள் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்ததும் போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

இந்த வீடியோக்கள் வைரலானதைத் தொடர்ந்து, அகமதாபாத் போக்குவரத்து காவல்துறை தாமாக முன்வந்து ‘ஏ’ பிரிவு போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, டிகு தல்சானியா மற்றும் பிரேம் காத்வி ஆகிய இருவரும் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். பின்னர், டிகு தல்சானியா மன்னிப்பு கோரும் வீடியோ ஒன்றை காவல்துறை வெளியிட்டது. அதில், ‘எங்களால் ஏதேனும் சிரமம் ஏற்பட்டிருந்தால்… நாங்கள் உண்மையிலேயே வருந்துகிறோம்’ என்று அவர் கூறியுள்ளார். பின்னால் அமர்ந்து பயணம் செய்ததால் மான்சி பரேக் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags : Ahmedabad ,Digu Talsania ,Prem Kadvi ,Mansi Parekh ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...