பயிர் கணக்கெடுப்பு துரிதப்படுத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்களும், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகிக் கொண்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், 33 சதவிகிதத்திற்கு அதிகமான பாதிப்பு அடைந்த பயிர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் தெரிவித்திருக்கும் தகவல் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

எனவே, 33 சதவிகிதத்திற்கு அதிகமான பாதிப்பு இருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடை வழங்குவதோடு, காப்பீட்டு நிறுவனங்களிடம் பேசி பயிர்க்காப்பீட்டு தொகையை விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மைத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: