பீகார் தேர்தல் பிரசாரத்தில் வன்முறை பாட்னாவில் பிரசாந்த் கிஷோர் ஆதரவாளர் சுட்டுக்கொலை: நிதிஷ்கட்சியினர் வெறிச்செயல்; வாகனங்கள் மீதும் தாக்குதல்

பாட்னா: பீகார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி தனித்தனியாக போட்டியிடுகின்றன. அதே போல் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனித்து போட்டியிடுகிறார். அவரது ஜன்சுராஜ் கட்சி சார்பில் பாட்னா மொகாமா தொகுதியில் பியூஷ் பிரியதர்ஷி நிறுத்தப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜேடியுவின் பலம் வாய்ந்த அனந்த் சிங், இந்தியா கூட்டணி சார்பில் ஆர்ஜேடி வீணா தேவி போட்டியிடுகிறார்கள். மொகாமாவில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் நவம்பர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. ஜன்சுராஜ் கட்சி வேட்பாளர் பியூஷ் பிரியதர்ஷிக்கு ஆதரவாக கட்சி நிர்வாகி துலர் சந்த்யாதவ் பிரசாரம் மேற்கொண்டார்.

தால் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தினார்கள். இதில் அவர் பரிதாபமாக பலியானார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். மேலும் ஜன்சுராஜ் கட்சி வேட்பாளர் பியூஷ் பிரியதர்ஷியுடன் வந்த வாகனங்கள் தாக்கப்பட்டன. இதனால் பெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டது. சுட்டுக்கொல்லபட்ட துலர் சந்த் யாதவ் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் வேட்பாளர் அனந்த்சிங்கை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டவர் ஆவார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த தேர்தலில் இருந்தே முன்விரோதம் இருந்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Stories: