×

சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் வள்ளியை யானை விரட்டும் காட்சி: திரளான பக்தர்கள் பங்கேற்பு

 

நாகை: நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கணபதி ஹோமத்துடன் கடந்த 21ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் இரவு தங்க ஆட்டு கிடா வாகனத்தில் சிங்காரவேலவர் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. சிங்காரவேலவர் – தெய்வானை திருக்கல்யாண வைபவம் நேற்றிரவு நடந்தது. இதையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் கோயிலில் இருந்து சிங்காரவேலவர் – தெய்வானையை மலர் அலங்காரத்தில் ஊர்வலமாக திருக்கல்யாண மண்டபத்துக்கு தூக்கி வந்தனர். தொடர்ந்து சீர்வரிசை எடுத்தல் நிகழ்ச்சி, மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிங்காரவேலவர் – தெய்வானை திருமண வைபவம் நடந்தது. இதன்பின் வள்ளி திருக்கல்யாணம் நடந்தது. வள்ளியும், முருகனும் ஒருவருக்கு ஒருவர் விரும்பிய நிலையில் முருகன் நாரதரை தூது அனுப்புகிறார்.

பின்னர் முருகன் கிழவன் வேடத்துடன் சென்று வள்ளியிடம் திருமண செய்து கொள்ளுமாறு கேட்கிறார். அதற்கு நான் முருகனை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்று வள்ளி கூறி விடுகிறார். இதையடுத்து தனது சகோதரர் பிள்ளையாரை யானை வேடத்தில் வள்ளியை மிரட்ட கூறுகிறார். அதன்படி விநாயகர் யானை வேடத்தில் வள்ளியை துரத்துகிறார். அப்போது பயந்துபோன வள்ளி தன்னை காப்பாற்றுமாறு கிழவன் வேடத்தில் இருந்த முருகனை கட்டி பிடித்து கொள்கிறார். அப்போது முருகன் கிழவன் வேடத்தை கலைத்து வள்ளிக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொள்கிறார். இது தத்ரூபமாக ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி நேற்றிரவு சிக்கல் கீழவீதியில் வள்ளியை யானை விரட்டு காட்சி நடத்தப்பட்டது. பின்னர் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் முருகன் – வள்ளி திருமணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Valli ,Sikkal Singara Velavar ,Nagai ,Kandashashti festival ,Sikkal Singara Velavar Swamy temple ,Soorasamharam ,Singara Velavar ,Soora ,Singara Velavar… ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்