திருவனந்தபுரம்: சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் துணை கமிஷனர் முராரி பாபுவை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க ரான்னி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்ட தங்கத்தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தங்கத்தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போத்தி மற்றும் செம்புத் தகடுகள் என்று சான்றிதழ் கொடுத்த தேவசம் போர்டு முன்னாள் துணை கமிஷனர் முராரி பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
உண்ணிகிருஷ்ணன் போத்தியை 14 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க ஏற்கனவே ரான்னி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இவரை ஐதராபாத், பெங்களூரு மற்றும் சென்னைக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.பெங்களூருவில் உள்ள உண்ணிகிருஷ்ணன் போத்தியின் வீட்டில் நடத்திய சோதனையில் 176 கிராம் தங்கம் மற்றும் பெங்களூருவில் இவர் வாங்கிக் குவித்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நிலங்களுக்கான ஆவணங்களும் சிக்கின. மேலும் இவரிடம் நடத்திய விசாரணையில் தங்கம் திருட்டில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதற்கான விவரங்களும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே திருவனந்தபுரம் சிறையில் உள்ள முராரி பாபுவை 1 வாரம் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் ரான்னி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், அவரை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க நேற்று அனுமதி வழங்கியது.இதையடுத்து போலீசார் முராரி பாபுவை விசாரணைக்காக திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் சென்றனர். இவரையும், உண்ணிகிருஷ்ணன் போத்தியையும் ஒன்றாக வைத்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு தீர்மானித்துள்ளது.
