கோவை: இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை, திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை கோவை வந்தார். துணை ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக தமிழகத்திற்கு வந்த அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், அங்கிருந்த நிருபர்களிடம் கூறுகையில், ‘உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும், இந்த தமிழ் மண்ணுக்கும் என் அன்பான வணக்கம். உங்களை மீண்டும் சந்திக்கிறேன், நன்றி’ என்றார். இதையடுத்து, அவர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கோவை கொடிசியா வந்தடைந்தார். அங்கு, அவருக்கு தொழில்துறையினர் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: நாடு உயர்ந்தால் நாம் உயர முடியும். தொழில் வளராமல், விவசாயம் மட்டுமே சாத்தியம் இல்லை. இரண்டும் ஒன்றுக்கு ஒன்றுதொடர்புடையது. விவசாயம், தொழில்துறை இரண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். துணை குடியரசு தலைவராக பொறுப்பு ஏற்றதும் என்னை சந்தித்த ரயில்வே அமைச்சரிடம் எர்ணாகுளம் – பெங்களுரு வந்தே பாரத் ரயில் கோவை, ஈரோடு, சேலம் உள்பட 4 நகரங்களில் நின்று செல்லும் வகையில் இயகக் வேண்டும் என கோரிக்கை வைத்தேன். மேலும், ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கோவைக்கு வருகின்றனர். ராஞ்சி-கோவை இடையே தினமும் புதிய ரயில் சேவை துவங்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். இந்த 2 ரயில் சேவைகளும் விரைவில் துவங்கப்பட உள்ளது. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு துணையாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
* ‘பாதுகாப்பில் குறைபாடு எதுவும் கிடையாது’
கோவை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை டவுன்ஹால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அப்போது மொபட்டில் இரு இளைஞர்கள் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து வேகமாக மாநகராட்சி அலுவலகம் போலீஸ் செக்போஸ்ட்டை கடந்து விழா நடக்கும் ரோட்டில் சென்றனர். இதையடுத்து பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக கூறி அங்கிருந்த பாஜவினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதுதொடர்பாக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘என் பாதுகாப்பில் குறைபாடு எதுவும் கிடையாது. எனக்கு கோவை மக்களே பாதுகாப்பு தான்’ எனக்கூறி புறப்பட்டு சென்றார். இந்நிலையில், மொபட்டில் அத்துமீறிய ஆஷிக், ரகுமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
