கடலூர்: கடலூர், திருவாரூர் மாவட்ட கொள்முதல் நிலையங்களில் ஒன்றிய குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். அவர்களிடம், இது ஆண்டுதோறும் நடக்கும் சடங்குதான் என விவசாயிகள் குற்றம் சாட்டினர். மழை காரணமாக கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து ஒன்றிய குழுவினர் தமிழகம் வந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒன்றிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஒன்றிய தானியங்கள் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவி இயக்குனர் பிரீத்தி தலைமையில் அதிகாரிகள் பிரியா பட், அனுபமா, உமா மகேஸ்வரி, அருண் பிரசாத் ஆகியோர் தூக்கணாம்பாக்கம் பகுதி நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்லை ஆய்வு செய்து, நெல்லின் ஈரப்பதம் குறித்தும், தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் கொள்முதல் நிலைய அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். காலை 8.40 மணிக்கு வந்த ஒன்றிய குழுவினர் 9.20 வரை ஆய்வு பணியை மேற்கொண்டனர். இதேபோல குறிஞ்சிப்பாடி அருகே குண்டியமல்லூர் பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் 199 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 92,330 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில், இந்த ஆய்வு நடைபெறுவதாக ஒன்றிய ஆய்வு குழுவினர் தெரிவித்தனர். புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்ற ஒன்றிய குழுவினர், அங்கு கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல்லை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதியில் ஆய்வு பற்றி தகவல் தரப்படாததால் குழுவினரிடம் தங்கள் கருத்தை தெரிவிக்க முடியவில்லை என்று விவசாயிகள் கூறினர்.
இதேபோல் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குனர் பி.கே.சிங் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கடந்த 26ம்தேதியும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 27ம்தேதியும் ஆய்வு மேற்கொண்டனர். 3வது நாளான நேற்று திருவாரூர் மாவட்டத்தில் கோவில்வெண்ணி, கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர். நெல்மணிகளில் ஒரு கிலோ ஆய்வுக்காக எடுத்துகொண்டனர்.
அப்போது ஒன்றிய குழுவினரிடம் காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், எவ்வித நிபந்தனையும் இல்லாமல் 22 சதவீத ஈரப்பதம் வரையில் கொள்முதல் செய்வதற்கான அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் விவசாயிகள் கூறுகையில், வருடந்தோறும் நடைபெறும் சடங்காகவே ஆய்வு இருந்து வருகிறது. ஒன்றிய அரசு ஓப்புதல் வழங்குவதற்குள் அறுவடை பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்து விடுகிறது. வரும் காலங்களில் குறுவை பயிர் அறுவடை துவங்குவதற்கு முன்பாகவே 22 சதவீதம் வரை ஈரப்பதம் கொண்டு கொள்முதல் செய்வதற்கான நிரந்தர உத்தரவை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும் என்றனர்.
