- ஆந்திரப் பிரதேசம்
- சென்னை
- மொன்டாஹா புயல்
- காக்கிநாடா
- மசூலிப்பட்டினம்
- கலிங்கப்பட்டினம்
- இந்திய வானியல் துறை
சென்னை: மோன்தா புயல் காரணமாக ஆந்திர மாநிலம் – சென்னை இடையே 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. மோந்தா புயல் ஆந்திர மாநிலம் கடலோரப் பகுதியான மசூலிப்பட்டினத்திற்கும், கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே, காக்கிநாடா அருகே, தீவிரப்புயலாக கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, ஆந்திர மாநிலத்தில், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி ஆகிய விமான நிலையங்களில் இருந்து, சென்னைக்கு வரும் 4 விமானங்கள், ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதனபடி, நேற்று காலை 9.45 மணியளவில் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மதியம் 1.35 மணியளவில் ராஜமுந்திரியிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மதியம் 1.40 மணியளவில், விஜயவாடாவில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மதியம் 1.45 மணியளவில் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை ரத்து செய்யப்பட்டது. அதேபோல், சென்னை- ராஜமுந்திரி இண்டிகோ ஏர்லைன்ஸ், சென்னை- விஜயவாடா இண்டிகோ ஏர்லைன்ஸ், சென்னை- விசாகப்பட்டினம் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
மோந்தா புயல் காரணமாக 9 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். மோன்தா புயல், கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து சில விமானங்கள் காலதாமதமாக இயக்கப்பட்டது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘விமான பயணிகள், விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, விமானங்கள் புறப்படும் நேரம் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றார்போல், தங்களது பயணத்தை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.
