×

ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில் சரவண பவன் ஆக்கிரமித்த ரூ.300 கோடி அரசு நிலம் மீட்பு: நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை

சென்னை: ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில் சரவண பவன் ஓட்டல் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.300 கோடி அரசு நிலத்தை, நீதிமன்ற உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர். ஆலந்தூர் எம்.கே.சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலை சந்திப்பில் உள்ள சர்வே எண் 146/2ல், 15 கிரவுண்ட் அரசு நிலம், ஓட்டல் சரவண பவன் நிர்வாகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், குத்தகை காலம் முடிந்த நிலையில், நிலத்தை அரசிடம் ஒப்படைக்காமல், அங்கு தொடர்ந்து சரவண பவன் ஓட்டல் செயல்பட்டு வந்தது.

இதுதொடர்பாக, வருவாய் துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், ஓட்டல் நிர்வாகம் இடத்தை காலி செய்யவில்லை. இதையடுத்து, அந்த நிலத்தை கையகப்படுத்த செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து, ஆலந்தூர் உரிமையியல் நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து ஓட்டல் நிர்வாகம் சார்பில், கோகுல கிருஷ்ணன் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோகுல கிருஷ்ணணின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், அந்த நிலத்தை மீட்க வருவாய் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா உத்தரவின்படி, வருவாய்த்துறை அலுவலர்கள் ஆறுமுகம், நடராஜன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று, அரசு நிலத்தில் இயங்கி வந்த சரவண பவன் ஓட்டலுக்கு சென்றனர்.

அங்கு, நீதிமன்ற உத்தரவை காண்பித்து, ஓட்டலில் இருந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு, ஓட்டலின் 2 நுழைவாயில்களை மூடி சீல் வைத்தனர். பொக்லைன் இயந்திரம் மூலம் ஓட்டலின் விளம்பர பலகைகளை இடித்து அகற்றினர். பின்னர், அந்த வளாகத்தின் நுழைவாயிலில், இந்த இடம் அரசுக்கு சொந்தமானது என அறிவிப்பு பேனர் அமைத்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.300 கோடி மதிப்பு என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Saravana Bhavan ,Alandur GST Road ,Chennai ,Saravana Bhavan Hotel ,Alandur MK Road ,GST Road ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்