×

திருவண்ணாமலை மாவட்டத்தில் முருகர் கோயில்களில் கந்த சஷ்டி விழா கோலாகலம்

*சூரசம்ஹாரத்தில் திரண்ட திரளான பக்தர்கள்

கலசபாக்கம் : கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கிரி மலையில் பிரசித்தி பெற்ற சுயம்பு சிவசுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

அன்று முதல் தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று சூரசம்ஹாரம் வதம் செய்ய முருகர் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் கிராமத்தில் உள்ள கரைகண்டேஸ்வரர் கோயிலுக்கு சென்று அன்னை பெரியநாயகியை வணங்கி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை நட்சத்திரகிரி மலை மீது உற்சவமூர்த்திகள் புறப்பட்டு எலத்தூர் கிராமத்திற்கு சென்றது.

உற்சவமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று இரவு சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகனை வழிபட்டனர்.

உற்சவமூர்த்திகள் இன்று குருவிமலை கிராமத்தில் நடைபெற உள்ள தீர்த்தவாரி மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டு வன்னியனூர் பேட்டை, புதுப்பாளையம், காங்கேயனூர் வழியாக இன்று காலை குருவிமலை வந்தடைந்தனர். வழி நெடுங்கிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

செய்யாறு அடுத்த கீழ் புதுப்பாக்கம் கற்பக விநாயகர் கோயிலில் பாலமுருகன் சஷ்டியை ஒட்டி நேற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கண்ணமங்கலம் அடுத்த தம்டகோடி திருமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நடந்தது.

மாலையில் பிரமாண்டமாக சூரசம்ஹாரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று விண்ணதிர முருக முருக என பக்தி முழக்கமிட்டனர். இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகர் கோயில்களில் கந்த சஷ்டி விழா, மாலையில் சூரசம்ஹாரம் நடந்தது.

தீர்த்தவாரி சிறப்பு

கலசபாக்கம் அடுத்த குருவிமலை கிராமத்தில் செய்யாற்றில் இன்று தீர்த்தவாரி நடைபெற உள்ளது. வழக்கமாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும் நதிகள் செல்வது வழக்கம். காசியில் மட்டும் தான் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்கிறது.

அதேபோல் கலசபாக்கம் செய்யாறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்கிறது. இங்கு நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பங்கேற்று செய்யாற்று நதியில் குளிப்பது காசியில் குளிப்பதற்கு நிகரானது என்பதால் ஆண்டுதோறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

Tags : Kanda Sashti festival ,Murugan ,Tiruvannamalai district ,Soorasamharam Kalasapakkam ,Swayambu Sivasubramaniaswamy ,Giri hill ,Elathur Mottur ,Kalasapakkam ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்