சென்னை: துபாய் செல்லும் தனியார் பயணிகள் விமானம் நேற்று பகல் 12.10 மணிக்கு மதுரையிலிருந்து துபாய்க்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும். ஆனால் நேற்று அந்த விமானம் தாமதமாக, 12.37 மணிக்கு மதுரையிலிருந்து 173 பேருடன் புறப்பட்டு, துபாய் நோக்கி சென்று கொண்டு இருந்தது. விமானம் நேற்று பிற்பகல் 1.15 மணியளவில், நடுவானில் சுமார் 27,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்தார்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் அந்த விமானம், அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளும், துரிதமாக செய்து முடிக்கப்பட்டன.
இந்த நிலையில் அந்த விமானம் நேற்று பிற்பகல் 2.35 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து பத்திரமாக, தரையிறங்கியது. விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டனர்.
அதோடு விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, பழுதடைந்த விமானத்தை பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதே விமானம் பழுதுபார்க்கப்பட்டு, மீண்டும் சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானி எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக, விமானம் பத்திரமாக, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கி உள்ளது. விமானியின் துரித நடவடிக்கை காரணமாக, விமானம் விபத்தில் இருந்து தப்பியதோடு, விமானத்திலிருந்து 167 பயணிகள் உள்பட, 173 பேர், நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
