சென்னை: டெங்குவை உருவாக்கும் ஏடிஸ் கொசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழையையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் அனைத்துத் துறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது.
இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் குறிப்பாக 2005, 2015ம் ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய பாதிப்புகளும் டிசம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளால் தான். எனவே இவற்றினை எதிர்நோக்கி மக்கள் பிரதிநிதிகளும், பிற சேவை துறைகளின் அலுவலர்களும் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
ஏடிஸ் கொசு என்பது நன்னீரில் ஏற்படுவது. வீட்டைச் சுற்றி எப்போதெல்லாம் மழைநீர் தேங்குகிறதோ அந்த கொசு உற்பத்தி ஆகும். தற்போது மழைக்காலம் என்பதால் கூடுதலாக உற்பத்தி ஆகும். தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளில் ஒற்றை இலக்கத்திலேயே டெங்கு இறப்பு என்பது இருந்துக் கொண்டிருக்கிறது. பாதிப்புகளின் எண்ணிக்கை 1500 இந்த ஆண்டு கடந்து இருக்கிறது. இதற்கு முன்பு அரசு மருத்துவமனைகளில் சேர்பவர்களுக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு பத்திரிகைகளில் வெளியிடுவார்கள்.
இந்த அரசு அமைந்த பிறகு பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு பாதிப்பு கணக்கெடுப்புக் கோரி அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் டெங்கு பாதிப்பு 1500 கடந்திருக்கிலாம். ஆனால் உயிரிழப்பு என்பது இந்தாண்டு இதுவரை 9 பேர். இந்த 9 உயிரிழப்புகளும் பெரும்பகுதி இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள், சிறிய அளவிலான காய்ச்சல் பாதிப்பு என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான ஆலோசனை பெற்று மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வது நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.
