புதுடெல்லி: கடந்த 2020ம் ஆண்டு இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களிடையே எல்லையில் ஏற்பட்ட கடுமையான மோதல்கள் ஏற்பட்டது. மேலும் கொரோனா பெருந்தொற்று பரவல் ஆகிய காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமானப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 2024ம் ஆண்டு முதல் இருதரப்பு உறவுகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் போது சந்தித்தனர்.
மேலும், டெப்சாங் மற்றும் டெம்சாக் பகுதிகளில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ரோந்துப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்தம் எட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கும் இடையேயான முதல் விமான சேவையை இந்தியாவைச் சேர்ந்த இண்டிகோ நிறுவனம் நேற்றுமுன்தினம் தொடங்கியது. கொல்கத்தாவில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான குவாங்சோவை அடைந்தது. தொடர்ந்து, வரும் நவம்பர் 9ம் தேதி முதல் ஷாங்காய் – புதுடெல்லி வழித்தடத்தில் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனமும், நவம்பர் 10ம் தேதி முதல் டெல்லி – குவாங்சோ வழித்தடத்தில் இண்டிகோ நிறுவனமும் தங்கள் சேவைகளைத் தொடங்க உள்ளன.
