- சூறாவளி
- வங்காள விரிகுடா
- புது தில்லி
- மத்திய அமைச்சரவை
- டி. வி. சோமநாதன்
- தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை
புதுடெல்லி: வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால் தயார் நிலையை ஆய்வு செய்வதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை குழு அதிகாரிகளுடன் ஒன்றிய அமைச்சரவை செயலாளர் டி.வி. சோமநாதன் நேற்று ஆலோசனை நடத்தினார். வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறி வரும் 28ம் தேதி மாலை நேரத்தில் காக்கிநாடாவைச் சுற்றியுள்ள ஆந்திரப் பிரதேச மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், புயலால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், மீட்பு பணிகளுக்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மத்திய அமைச்சரவை செயலாளர் டி.வி.சோமநாதன் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியின் தலைமைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் புயல் பாதிப்பு ஏற்பட்டால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேபோல் பொது சொத்துக்கள், வீடுகளுக்கு பெரிய அளவில் சேதம் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று பேரிடர் மீட்பு குழுவினரை அமைச்சரவை செயலாளர் கேட்டு கொண்டார். மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லகூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ராணுவம்,கடற்படை, விமான படையின் மீட்பு குழுவினரையும் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
