×

பாஜ எம்எல்ஏ குற்றச்சாட்டால் பரபரப்பு: மகாராஷ்டிரா பெண் மருத்துவர் தற்கொலையில் எம்பிக்கு தொடர்பு

சத்ரபதி சம்பாஜிநகர்: மகாராஷ்டிராவில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் 28 வயது பெண் மருத்துவர் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் வழக்கில் எம்.பி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக பாஜ எம்எல்ஏ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண் மருத்துவர், பால்டனில் உள்ள சதாரா மாவட்ட துணை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். பால்டனில் ஒரு ஓட்டலில் தங்கி பணிபுரிந்த அவர், கடந்த வியாழக்கிழமை தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே என்பவர் பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அவருக்கு தெரிந்த இன்ஜினியரான பிரசாந்த் பங்கர் என்பவரும் பெண்ணை மன ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் கைதிகளின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை மாற்றித் தரச் சொல்லி அவர்கள் பெண் மருத்துவரை துன்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த பெண் மருத்துவர், பதானே மற்றும் பங்கர் ஆகிய இருவரது பெயரையும் தனது உள்ளங்கையில் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜ எம்எல்ஏ சுரேஷ் தாஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘ஒரு எம்பியும் அவரது கூட்டாளிகளும் பெண் மருத்துவரை மிரட்டி உள்ளனர்.

ஒரு எம்பியின் (பெயரை குறிப்பிடாமல்) தனிப்பட்ட உதவியாளர், மருத்துவரை செல்போனில் அழைத்து அவரிடம் பேசச் சொல்லியுள்ளனர். எம்பிக்கு தெரிந்த கைதி ஒருவருக்கு உடற்தகுதி சான்றிதழை வழங்கக் கோரி மிரட்டியுள்ளனர். விசாரணையில் அது யார் என்பது தெரியவரும். அவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மருத்துவரின் மரணத்தில் சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும். தனக்கு நேர்ந்த துயரங்களை பற்றி பெண் மருத்துவர் பலமுறை புகார் அளித்திருக்கிறார். அதில் எந்த நடவடிக்கையும் எடுக்காதவர்களையும் தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.இதற்கிடையே, இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இன்ஜினியர் பிரசாந்த் பங்கரை போலீசார் நேற்று புனேவில் கைது செய்தனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் பதானேவை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Tags : BJP MLA ,Maharashtra ,Chhatrapati Sambhajinagar ,Beed district… ,
× RELATED புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு...