- சபரிமலை
- உன்னிகிருஷ்ணன் போதி
- கர்நாடக
- பெங்களூரு, சென்னை
- திருவனந்தபுரம்
- ஐயப்பன் கோவில்
- திருவிதாங்கூர் தேவசம் போர்டு...
திருவனந்தபுரம்:சபரிமலை கோயில் தங்கத் தகடுகளில் இருந்து உண்ணிகிருஷ்ணன் போத்தி திருடி விற்ற தங்கத்தை கர்நாடக நகை வியாபாரியிடம் இருந்து தனிப்படை போலீசார் மீட்டனர்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்து தங்கம் திருடிய சம்பவத்தில் உண்ணிகிருஷ்ணன் போத்தி மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் துணை கமிஷனர் முராரி பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்ணிகிருஷ்ணன் போத்தியை வரும் 30ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முராரி பாபு தற்போது திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உண்ணிகிருஷ்ணன் போத்தியிடம் தனிப்படை போலீசார் கடந்த சில தினங்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு முக்கிய விவரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவரங்களின் அடிப்படையில் முராரி பாபுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் சபரிமலையில் இருந்து தங்கத் தகடுகளை பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னைக்கு உண்ணிகிருஷ்ணன் போத்தி கொண்டு சென்றது தெரியவந்தது. சென்னை ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் வைத்து உருக்கிய தங்கத்தை உண்ணிகிருஷ்ணன் போத்தி கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த கோவர்தன் என்ற நகைக்கடை உரிமையாளரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. கோவர்தனிடம் 476 கிராம் தங்கத்தை விற்றதாக உண்ணிகிருஷ்ணன் போத்தி போலீசிடம் வாக்குமூலம் அளித்திருந்தார். இதையடுத்து இந்த தங்கத்தை கைப்பற்றுவதற்காக நேற்று முன்தினம் உண்ணிகிருஷ்ணன் போத்தியை தனிப்படை எஸ்பி சசிதரன் தலைமையிலான போலீசார் கர்நாடக மாநிலம் பெல்லாரிக்கு அழைத்து சென்றனர்.
பெல்லாரியில் கோவர்தனின் நகைக்கடையில் நடத்திய சோதனையில் உண்ணிகிருஷ்ணன் போத்தி விற்றதாக கூறப்பட்ட தங்கம் மீட்கப்பட்டது. இதற்கிடையே, சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத்தை திருடியவர்கள் அனைவரையும் கைது செய்யக்கோரியும், தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் ராஜினாமா செய்யக் கோரியும் பாஜ சார்பில் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன் ‘ராப்பகல்’ போராட்டம் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய இந்தப் போராட்டம் நேற்று இரவு வரை நீடித்தது.
