மங்கலம்பேட்டை: ஆசிரியையும், சமையலரையும் பள்ளி தாளாளர் மகன், ஒரே நேரத்தில் காதலித்து ஏமாற்றியதால் ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே விஜயமாநகரம் புது விளாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல் (60), விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் ராதிகா(35), மங்கலம்பேட்டை அடுத்த வீராரெட்டிக்குப்பத்தில் உள்ள ஒரு மழலையர் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கடந்த 17ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற ராதிகா, இரவில் தனது அறையில் தூங்கச் சென்றார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், ராஜவேலுவும், அவரது மனைவியும் கதவை உடைத்து பார்த்தபோது, புடவையால் ராதிகா தூக்குபோட்டு இறந்திருந்தது தெரிய வந்தது.
மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக ராஜவேல் கொடுத்த புகாரின்பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ராதிகா பணிபுரிந்த தொடக்க பள்ளி தாளாளர் ஜேசுதாஸ் ராஜாவின் மகன் பிரின்ஸ் நவீன் (37) என்பவரும், ராதிகாவும் காதலித்துள்ளனர். அதே பள்ளியில் சமையலராக வேலை செய்த மற்றொரு பெண்ணையும் பிரின்ஸ் நவீன் காதலித்து வந்தது ராதிகாவுக்கு தெரியவே வீடியோ கால் மூலம் அவருடன் தொடர்பு கொண்டு கண்டித்துள்ளார். பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ராதிகாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்து பிரின்ஸ் நவீனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
