×

5 நாட்களுக்கு பின் ஊட்டி மலை ரயில் இன்று மீண்டும் இயக்கம்

 

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே கன மழை, தண்டவாளத்தில் மண் சரிவால் 5 நாட்களாக தடைபட்ட மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயங்க துவங்கியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற சிறப்பு வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதமான சூழல், பசுமை பள்ளத்தாக்குகள், ஜில்லென்ற நீர்வீழ்ச்சிகள் ஆகிய இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்காக இந்த மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாடுகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

அந்த வகையில் கடந்த அக்.19ஆம் தேதி மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் பாதையில் கல்லாறு – ஹில்குரோவ் இடையே 10 க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ராட்சத பாறைகள் தண்டவாளத்தில் விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது. இதையடுத்து அன்றைய தினம் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. அன்று முதல் நேற்று வரை மலை ரயில் பாதையில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. பணிகள் முழுமையாக நேற்றிரவு முடிவடைந்ததால் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் 184 பயணிகளுடன் 5 நாட்களுக்கு பின்னர் உற்சாகமாக புறப்பட்டு சென்றது.

Tags : Ooty Mountain Train ,Mettupalayam ,Ooty ,UNESCO ,Coimbatore ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...