சென்னை: அடையாறில் இருந்து சைதாப்பேட்டை வரை ரூ.1,500 கோடி செலவில் அடையாற்றை அழகுபடுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, அடையாறு மண்டலம், பெசன்ட் நகர், ஊர்குப்பம் பகுதியில் உள்ள முகத்துவார பகுதியில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு பருவமழைக்கு முன்பாகவும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார். அந்தவகையில் தான் பருவ மழை காலங்களில் மிகப்பெரிய அளவில் வெள்ளப் பாதிப்புகளோ, நோய் பாதிப்புகளோ இல்லாத நிலை உள்ளது. தற்போது சென்னையில் பெய்திருக்கும் சராசரி மழையின் அளவு 16.93 செ.மீ. என்று பதிவாகி இருக்கிறது. தற்போது 16.93 செ.மீ அளவிற்கு மழை பெய்திருந்தும் கூட மக்களை பாதிக்கவில்லை. இன்று அடையாறு முகத்துவாரம் பணி சீர்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது உபரிநீர் கடலில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் கலந்து கொண்டு வருகிறது.
அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடி செலவில் மிகப்பெரிய திட்டத்தை முதல்வர் கொடுத்துள்ளார். தற்போது டெண்டர் விடும் பணிகள் எல்லாம் விட்டு தயார் செய்து இருக்கிறார்கள். அடையாறில் இருந்து சைதாப்பேட்டை வரை அடையாற்றின் இரு வழிகளிலும் கரைகள் எழுப்பி பலப்படுத்தி சுற்றுலா மையமாக மாற்ற உள்ளார்கள். மல்லிகை பூ நகர் பகுதி மக்கள் பாதிக்காத வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் அந்த பணிகள் நடைபெற தொடங்கினால் 1.5 ஆண்டுகளுக்குள் அடையாற்றில் இருந்து சைதாப்பேட்டை வரை உள்ள பகுதிகள் அழகுப்படுத்தப்படும். பலப்படுத்தப்படும், சுற்றுலா மையமாகவே மாறி மக்களுக்கு பாதுகாப்பான அமைப்பாக உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
