புதுடெல்லி: ஆயுத படைகளுக்காக நீர் நிலைகளில் செல்லும் 6 அதிவிரைவு ரோந்து படகுகளை ஒன்றிய அரசு வாங்க திட்டமிட்டுள்ளது. கண்காணிப்பு மற்றும் உளவு பார்த்தல், நீர்நிலைகளில் ரோந்து செல்லுதல் ஆகியவற்றிற்காக இந்த அதிவேக படகுகள் வாங்கப்படுகிறது. மேலும் மோதல்கள் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பை மேற்கொள்வதற்கு அதிவிரைவு ரோந்து படகுகள் பயன்படுத்தப்படும்.
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிவிரைவு ரோந்து படகுகள் குறைந்தபட்சம் 60 சதவீத உள்நாட்டு உள்ளடக்கத்துடன் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட இந்திய விற்பனையாளரிடமிருந்து வாங்கப்படும். அரசாங்கம் இந்த கோரிக்கைக்கு அசல் நிறுவனத்திடமிருந்து மட்டுமே பதில்களை கோருகிறது.
அதிவிரைவு ரோந்து படகுக்கான டெண்டர் தொடங்கியுள்ளது. இது தொடர்பான விளக்கங்களை பெறுவதற்கான கடைசி தேதி நவம்பர் 11ம் தேதி. டெண்டர்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி தேதி ஜனவரி 13ம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
