சென்னை: ரயில் பயணிகள் சாப்பிட்டு குப்பை தொட்டியில் வீசிய கவர்களை மீண்டும் பயன்படுத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து பீகாருக்கு செல்லும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16601) ஏற்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பரவி, உணவு பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே கேட்டரிங் ஊழியர்கள், பயணிகளால் பயன்படுத்தப்பட்ட அதாவது ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு பொட்டல அலுமினிய கவர்கள் (அலுமினியம் ஃபாயில்) உணவு பாத்திரங்களை ரயிலின் சுத்திகரிப்பு அறையில் கழுவி, மீண்டும் பயன்படுத்த முயன்றதாக வைரல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், ரயில் பயணிகள் சாப்பிட்டு குப்பை தொட்டியில் வீசிய கவர்களை ரயில்வே ஊழியர்கள் எடுத்து சுத்தம் செய்யும் அறையின் டேபிளில் கழுவி, உணவு சேவைக்கு தயார் செய்யும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. இது கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் இதற்கு ஐஆர்சிடிசி பதிலளித்துள்ளது. அதில், ‘இந்த விவகாரத்தில் தொடர்புடைய வியாபாரியை நீக்கி, அவரது உரிமத்தை ரத்து செய்து, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தனிமனித சம்பவமாகும். உணவு பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என்று ஐஆர்சிடிசி கூறியுள்ளது.
அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டவை. இந்த ரயில்களில் சுத்தமான பராமரிக்கவும், சிறந்த கேட்டரிங் சேவைகள் போன்ற மேம்பாடுகளை வழங்குவதன் மூலம் பயணிகளின் வசதியை அதிகரிக்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும், இந்த சம்பவம் இந்திய ரயில்வேக்களின் உணவு சேவைகளில் ஏற்படும் சுத்திகரிப்பு குறைபாடுகளை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. பயணிகள் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க மேலும் கண்காணிப்பு அமைப்புகளை அறிமுகப்படுத்தும் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
