சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22ம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில் வரும் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் 4 நாட்கள் முன்னதாகவே கடந்த 16ம் தேதி தொடங்கியது. இந்த பருவ மழை டிசம்பர் வரை தமிழகத்தின் தென்கோடி பகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் இயல்பை விட சற்று அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, அக்டோபர் மாதம் வழக்கத்தை விட கூடுதலாக 15 சதவீதம் மழை பொழியும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22ம் தேதி ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், மழைநீர் தேங்காதவாறு எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிவார்.
மேலும், கடந்த காலங்களில் வெள்ளப் பாதிப்பு பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நினைவில் கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்படும். மேலும், பருவ மழையால் டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கிடங்கு, கொள்முதல் நிலையங்களில் எந்தவித இடர்பாடும் ஏற்படாத வண்ணம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆலோசனை கூட்டத்தில் விவாதிப்பார் என தலைமைச்செயலக அதிகாரிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
