டாக்டர்கள் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ளாதீர்கள்: அமைச்சர் வேண்டுகோள்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று, தமிழகத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை தடை செய்வது குறித்து பல்வேறு கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தனர். இதன் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.பி.உதயகுமார் (அதிமுக), அசன் மவுலானா (காங்கிரஸ்), எஸ்.எஸ்.பாலாஜி (விசி), வானதி சீனிவாசன் (பாஜ), அருள் (பாமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக) ஆகியோர் பேசினர். இதற்கு பதில் அளித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: இருமல் மருந்து குறித்து கடந்த அக்டோபர் 1ம் தேதி பிற்பகல் மத்தியபிரதேசம் மருந்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறைக்கு இ-மெயிலில் கடிதம் வந்தது. இந்த கடிதம் கிடைத்த அரை மணி நேரத்தில் முதுநிலை மருந்து ஆய்வாளர் தலைமையில் நிறுவனத்தை ஆய்வு செய்தனர். நிறுவனம் மூடப்பட்டது.தமிழகத்தில் மருந்து கட்டுப்பாடு துறைக்கு தேவையான அளவு பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்வார்கள். பொதுமக்களும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று தன்னிச்சையாக யாரும் மருந்து வாங்கி உட்கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: