தீபாவளி சிறப்பு சண்டே சமையல்!

புதினா சாமை அரிசி தட்டு வடை

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு – 1 கப்
சாமை அரிசி மாவு – 1 கப்
பொட்டுக்கடலை மாவு – 1/2 கப்
பாசிப்பருப்பு – 1/2 கப்
புதினா – ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் – 6
மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
பூண்டு – 7 பல்
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

ஒரு கடாயில் இரண்டு அரிசி மாவையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். அதில் பொட்டுக்கடலை மாவு சேர்த்து கலந்துகொள்ளவும். பூண்டு, காய்ந்த மிளகாய், மிளகு மற்றும் சீரகம் ஆகியவற்றை தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். அதை மாவுடன் சேர்த்து பெருங்காயம், உப்பு மற்றும் சூடான எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து அதையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளவும். அனைத்தையும் நன்கு கலந்து விடவும். பிறகு புதினாவை தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி அந்த தண்ணீரை இந்த மாவில் சிறிது சிறிதாக ஊற்றி தட்டை பதத்திற்கு பிசைந்துகொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பிசைந்து மாவை தட்டைகளாக தட்டிப்போடவும். திருப்பிப்போட்டு இருபுறமும் வெந்தவுடன் எடுக்கவும். சுவையான புதினா சாமை அரிசி தட்டுவடை தயார்.

பாசிப்பயறு இளநீர் அல்வா

தேவையான பொருட்கள்

பாசிப்பயிறு – 2 கப்
இளநீர் தேங்காய் – ஒன்று
சர்க்கரை – 2 கப்
நெய் – ஒரு கப்
முந்திரி, பாதாம் – பொடித்தது தலா ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை

பாசிப்பயறை 6 மணி நேரம் ஊறவைத்து அரைத்து பால் பிழிந்து கொள்ளவும். ஒரு இரவு முழுவதும் அந்தப் பாலை அப் படியே வைக்கவும். காலையில் மேலே தேங்கி இருக்கும் நீரை வடித்துக்கொள்ளவும். அடுப்பில் கனமான பாத்திரம் வைத்து அரை டம்ளர் தண்ணீர் விட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும். அதில் பாசிப்பயறு பாலை ஊற்றி அனலை குறைத்து அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். நன்கு வெந்து அல்வா பதத்தில் சுருண்டு வரும் போது இளநீரில் இருக்கும் தேங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். நெய் ஊற்றி கிளறவும். முந்திரி, பாதாம் தூவி இறக்கவும். சுவையான பாசிப்பயறு இளநீர் அல்வா தயார்.