புறநகரில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டவை காட்சிப்பொருளாக மாறிய சிசிடிவி கேமராக்கள்: குற்றச்சம்பவங்களை தடுப்பதில் சிக்கல்

தாம்பரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் காவல்துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி, தாம்பரம், சேலையூர், குரோம்பேட்டை, சிட்லபாக்கம், பீர்க்கன்காரணை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடன் போலீசார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை அமைத்தனர். இதன் மூலம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், இந்த சிசிடிவி கேமராக்கள் முறையான பராமரிப்பு இல்லாததால், பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் உடைந்தும், செயலிழந்தும் காணப்படுகிறது. ஒருசில இடங்களில் சிசிடிவி கேமராக்களை மரக்கிளகைள், கொடிகள் சூழ்ந்தும் காணப்படுகிறது.

இதனால், மீண்டும் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலை விபத்துகள் ஏற்படுத்தி தப்பி செல்லும் வாகனங்களை கண்டறிய முடியாத நிலை உள்ளது. அதுமட்டுமின்றி பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் காட்சிப் பொருளாக மாறியுள்ளன. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவ்வாறு கேமராக்கள் அமைப்பதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நிதி உதவி செய்தனர். ஆனால், புதிதாக சிசிடிவி கேமரா அமைப்பதற்கு நிதி உதவி செய்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், கேமராக்களை பராமரிப்பதற்கு உதவி செய்வது இல்லை.

இதனால், பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்து காணப்படுகிறது. தமிழக அரசும் இதற்கு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. இதனால் குற்ற சம்பவங்கள் நடைபெறும்போது குற்றவாளிகளை பிடிப்பதற்கும், சாலை விபத்து ஏற்படுத்தி தப்பி செல்பவர்களை கண்டறியவும் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, சிசிடிவி கேமராக்களை பராமரிக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும். அதேபோல, தமிழக அரசும் இதற்கான நடவடிக்கை எடுத்தால் குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறைக்கு பெரும் உதவியாக இருக்கும்,’’ என்றனர்.

Related Stories: