கோவை: தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தமிழ்நாட்டின் புத்தொழில் சூழலை உலகத்தரத்தில் மேம்படுத்தும் முயற்சியாகவும், தமிழ்நாட்டின் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களுக்கு பன்னாட்டு இணைப்புகளை ஏற்படுத்தும் வகையில் உலக புத்தொழில் மாநாடு கோவை பீளமேடு கொடிசியா அரங்கில் நேற்று முன்தினம் துவங்கியது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நேற்று இரண்டாவது நாளாக இம்மாநாடு நடந்து, மாலையுடன் நிறைவடைந்தது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இம்மாநாட்டில், பிரான்சின் லிங்க் இன்னோவேசன்ஸ், பிலிப்பைன்ஸின் டெக் ஷேக், ஜெர்மனியின் ஆசிய பெர்லின் போரும், தென்கொரியாவின் யூனிகார்ன் இன்குபேட்டர், கனடாவின் ஆர்.எக்ஸ்.என். ஹப், ப்ளு ஓசன் மற்றும் லோவ்ஸ் இந்தியா உள்ளிட்ட 23 பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின. மேலும், மாநாட்டில் கலந்து கொண்ட 250க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் ரூ.130 கோடிக்கும் மேற்பட்ட முதலீடுகள் உறுதிசெய்யப்பட்டன. இன்னும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகள் வரும் மாதங்களில் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங், டெகத்லான், லோவ்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் நடத்திய கார்ப்பரேட் கண்டுபிடிப்பு சவால்கள் மற்றும் கார்ப்பரேட் மற்றும் புத்தொழில் இணைப்பு நிகழ்ச்சிகள் மூலம் என்விடியா, போஸ்க், டைம்லர் டிரக் போன்ற தொழில்துறை நிறுவனங்களுடன் 25 தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இணைக்கப்பட்டன. இது, எல்லை தாண்டிய புதுமை, முதலீடு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது. இந்த மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில திட்ட ஆணைய துணை தலைவர் ஜெயரஞ்சன் தலைமை தாங்கினார். அவர், 22 ஆரம்ப நிலையில் உள்ள வளர்தொழில் மையங்களுக்கு (ப்ரீ இன்குபேசன் சென்டர்) தலா ரூ.7.5 லட்சம் மற்றும் 15 வளர்தொழில் மையங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
மேலும் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் புதிய ஸ்டார்ட்-அப்களை உருவாக்க ஊக்கமளிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீட்டு ஆணைகளையும் வழங்கினார். பின்னர் பேசிய ஜெயரஞ்சன், ‘‘தமிழ்நாட்டின் ஸ்டார்ட்-அப் சூழல் விரைவில் பெரிய முன்னேற்றத்தை காண உள்ளது. இது, ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு அமைப்பின் முயற்சிகளால் சாத்தியமாகி வருகிறது. முதலமைச்சரின் குறிக்கோளான 2030க்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்டதாக மாற்றும் இலக்கை அடைய முடியும்’’ என்றார். முடிவில், ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு நிறுவனத்தின் இயக்குனர் சிவராஜா ராமநாதன் நன்றி கூறினார்.
