கொரோனாவால் 10 மாதமாக ரத்தான செம்மொழி, திருப்பதி, ஜோத்பூர் ரயில் சேவையை துவக்க வேண்டும்: பயணிகள், வர்த்தகர்கள் வலியுறுத்தல்

மன்னார்குடி, டிச.23: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 10 மாத காலமாக நிறுத்தப்பட்டு ள்ள செம்மொழி, திருப்பதி, ஜோத்பூர் செல்லும் விரைவு ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும் என ரயில் பயணிகள், வர்த்தகர்கள் வலியுறுத்தி உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ரயில் போக்கு வரத்து கடந்த மார்ச் 23 ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. அதன் பின் புலம் பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதையடுத்து மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சிறப்பு ரயில்களை வாரியம் இயக்க துவங்கியது.

அதன் தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்களில் இருந்து கடந்த டிசம்பர் 8 ம் தேதி முதல் மன்னை , கம்பன் ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருவது பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மன்னை- கோவை இடையே செம்மொழி விரைவு ரயில், மன்னை - திருப்பதி இடையே பாமணி விரைவு ரயில் மற்றும் மன்னை - ஜோத்பூர் இடையே பகல் கீ கோத்தி விரைவு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த மூன்று ரயில்களும் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 10 மாத காலமாக இயக்கப்படவில்லை.

ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வர இருப்பதால் நிறுத்தப் பட்ட செம்மொழி, திருப்பதி, ஜோத்பூர் செல்லும் விரைவு ரயில்கள் விரை வில் இயக்கப்பட வேண்டும் என மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களை சேர்ந்த ரயில் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்பார்கிறார்கள். இந்த ரயில் சேவைகளை மீணடும் இயக்க தெற்கு ரயில்வே அறிவிப்பு விரைவில் வெளியிடுமா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து மன்னை வர்த்தக சங்க பொதுச்செயலாளர் ஆர்வி ஆனந்த் கூறுகையில், மன்னார்குடி, திருவாரூர் , திருத்துறைபூண்டி, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம் நகர வியாபாரிகள் கோவை, திருப்பூர் நகரங்களோடு வியாபார தொடர்பு வைத்து இருக்கிறார்கள். பல்வேறு விதமான வர்த்தக சரக்குகள் கொள்முதல் செய்ய செம்மொழி விரைவு ரயிலில் போய் வருவார்கள். இரவு நேரத்தில் இயக்கப்படுவதால் வர்த்தக பணி முடித்து அதே ரயிலில் மீண்டும் திரும்ப வசதியாக இருக்கும். கடந்த 10 மாதமாக போக்குவரத்து இல்லாமல் வர்த்தகம் முடங்கி இருக்கிறது. செம்மொழி விரைவு ரயில் உடனடியாக இயக்கப்பட வேண்டும். இது குறித்து கோரிக்கை மனு தெற்கு ரயில்வே பொதுமேலாளாருக்கு அனுப்ப இருக்கிறோம் என கூறினார்.

இதுகுறித்து இளம் தொழில் முனைவோர் இள.அருண் கூறுகையில், மன்னார்குடி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் திருப்பூர் நகரில் வேலை செய்கிறார்கள். கொரோனா நோய் தொற்று குறைய தொடங்கியதை அடுத்து பின்னலாடை நிறுவனங்கள் முழுமையாக செயல் பட தொடங்கி விட்டன. கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் நிறைய மாணவ மாணவியர்கள் மேற்படிப்பு படிக்கிறார்கள். கல்லூரிகள் ஊரடங்கிற்கு பிறகு திறக்கப்பட்டு விட்டன. சரியான போக்குவரத்து இல்லாமல் அனைவரும் தவிக்கிறார்கள். மக்கள் சிரமங்ளை கருத்தில் கொண்டு கோவைக்கான செம்மொழி ரயிலை விரைவில் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து ரயில் உபயோகிப்பாளர் பிரபு கூறுகையில், ஆங்கில புத்தாண்டு மற்றும் அதனையொட்டி பொங்கல் பண்டிகை வர உள்ளது. இதையொட்டி சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வேலை பார்க்கும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் குறைந்த கட்டணத்தில் சொந்த ஊருக்கு வந்து செல்ல ரயில் சேவையை மட்டுமே நம்பி உள்ளனர். ஆம்னி பஸ்கள் கட்டணம் தாறுமாறாக உள்ளது. தற்போது இயக்கபடும் அரசு பஸ்களில் இடம் கிடைப்பது இல்லை. மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விட்டார்கள். எனவே, ரயில் போக்குவரத்தை மட்டும் முடக்கி வைத்து இருப்பது அர்த்தமற்றது என்றார்.

எனவே, ஊரடங்கு காரணமாக கடந்த 10 மாத காலமாக நிறுத்தப்பட்டுள்ள செம்மொழி, திருப்பதி, ஜோத்பூர் செல்லும் விரைவு ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Related Stories: