கழிவுநீர் தேக்கம், குப்பை குவியலால் சுகாதார கேடு மாநகராட்சி ஆணையரை மக்கள் முற்றுகை: புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் தமிழக அரசின் மினி  கிளினிக்  தொடங்கப்பட உள்ளது. இதற்காக, கன்டெய்னர் பெட்டியில் ₹4 லட்சம் செலவில் குளிர்சாதன வசதி, பயோ கழிப்பறை உள்ளிட்ட   வசதிகளுடன் கிளினிக் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்,  சுகாதாரத்துறை அலுவலர்களுடன் நேற்று ஆய்வு செய்தார். அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் உடன் இருந்தார். அப்போது, அங்கு  திரண்ட பொதுமக்கள்  மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷை முற்றுகையிட்டு, ‘‘இந்த பகுதியில் அடிக்கடி கழிவுநீர் அடைப்பு ஏற்படுகிறது. குப்பை முறையாக அகற்றுவதில்லை. இதனால்,  நோய் பாதிப்பில்  தவித்து வருகிறோம். மேலும், சாலையை  ஆக்கிரமித்து பெட்டிக்கடை  நடத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அதை அகற்ற வேண்டும், என புகார் அளித்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: பிரிட்டன் நாட்டில் புதிய கொரோனா வைரஸ் வேகமாக  பரவி வருகிறது. அங்கிருந்து டெல்லி வழியாக சென்னை வந்தவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், கடந்த ஒரு மாதத்தில் இந்த நாட்டுக்கு பயணம் செய்தவர்கள்  பட்டியல் தயார் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளனர். வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் உடனே மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பிரிட்டன்  மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இருந்து விமானங்கள் இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நோய்த்தொற்று பரவி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டன் மற்றும் இங்கிலாந்து நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஐஐடியில் நோய்தொற்று கண்டறியப்பட்டதால், அனைத்து கல்லூரிகளிலும்   இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: