தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்த கோரும் மனுக்கள் மீது 3 மாதங்களில் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாகவும், ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவது தொடர்பாகவும் தனியார் பள்ளிகள் இயக்குனர் பரிந்துரை மீது 12 வாரங்களில் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி, கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குனர், கடந்த மார்ச் மாதம் அளித்த பரிந்துரைகளை பரீசிலீத்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிடக் கோரி, அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதேபோல, கல்வி உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், ஆரம்ப பள்ளிகளை, நடுநிலை பள்ளியாக உயர்த்துவது தொடர்பாக, தனியார் பள்ளிகள் இயக்குனர், கடந்த மார்ச் மாதம் அளித்த பரிந்துரைகளை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரியும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சங்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவுகளை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இதே கோரிக்கையுடன் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்த தனியார் பள்ளிகள் இயக்குனர், நிரந்தர அங்கீகாரம் வழங்க பரிந்துரைத்துள்ளார். அதேபோல, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள ஏழை மாணவர்கள், ஐந்தாம் வகுப்புக்கு பின் வேறு பள்ளிகளில் சேர முடியாத நிலை உள்ளதாக அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில், ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் பரிந்துரைத்துள்ளார். அந்த பரிந்துரைகளை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாகவும், பள்ளிகளை தரம் உயர்த்துவது தொடர்பாகவும் பல்வேறு நிபந்தனைகளுடன் தனியார் பள்ளிகள் இயக்குனர் பரிந்துரை அளித்துள்ளார். ஒவ்வொரு பள்ளிகளும் இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளனவா என்பதை ஆராய்ந்து அதன் அடிப்படையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாகவும், பள்ளிகளை தரம் உயர்த்துவது தொடர்பாகவும் தனியார் பள்ளிகள் இயக்குனர் பரிந்துரை மீது 12 வாரங்களில் தகுந்த உத்தரவுகளை கல்வித்துறை செயலாளர் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: