165 பேருடன் நடுவானில் பறந்தபோது பெங்களூரு விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: அவசரமாக சென்னையில் தரையிறங்கியது

சென்னை: சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 160 பயணிகள் உள்பட 165 பேருடன் பெங்களூரு சென்ற பயணிகள் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திர கோளாறு காரணமாக, அவசரமாக சென்னைக்கு திரும்பி வந்து தரையிறங்கியது. பின்பு மாற்று விமானம் மூலம், பயணிகள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7.05 மணிக்கு பெங்களூரு செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தாமதமாக இரவு 7.50 மணிக்கு பெங்களூரு புறப்பட்டு சென்றது.

விமானத்தில் 160 பயணிகள், 5 விமான ஊழியர்கள் உள்பட 175 பேர் இருந்தனர். விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு, காஞ்சிபுரம் கடந்து வேலூர் அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார். சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக்கொண்டு வந்து தரையிறக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் 8.30 மணிக்கு மீண்டும் சென்னைக்கு வந்து அவசரமாக தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமான பொறியாளர்கள் விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் விமானத்தை உடனடியாக பழுது பார்க்க முடியாததால், பயணிகளை மாற்று விமானத்தில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி விமானம் பழுதால் தவித்துக் கொண்டிருந்த 160 பயணிகளும், மாற்று விமானம் மூலமாக நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னையில் இருந்து 160 பயணிகள் உள்பட 165 பேருடன், பெங்களூரு புறப்பட்டு சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு, விமானி துரிதமாக செயல்பட்டு, விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டு வந்து தரையிறக்கியதால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டு, விமானத்தில் இருந்த 165 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: