தாய் வீட்டிற்கு விருந்துக்கு வந்தபோது சோகம் திருமணமான 4 நாளில் புதுப்பெண் தற்கொலை: வரதட்சணை கொடுமையா?

 

ஒடுகத்தூர்: வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த அரசியலை கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன்(47), இவரது மனைவி செல்வி(40). 3 மகள்கள், ஒரு மகன். இதில், 3வது மகள் விஜயசாந்திக்கும்(24) கரடிகுடி அருகே ரஜாபுரம் கிராமத்தை சேர்ந்த ஞானவேலுக்கும்(27) கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில், தாய் வீட்டு விருந்திற்காக விஜயசாந்தி, கணவர் ஞானவேல் ஆகியோர் நேற்று வந்துள்ளனர். மதியம் 2 மணிக்கு விருந்து முடிந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் அங்குள்ள நிலத்திற்கு காரில் சென்று சுற்றிப் பார்த்துள்ளனர். அப்போது, விஜயசாந்தி கணவரிடம் மாடுகளை கட்டி வைத்து விட்டு வருவதாக கூறி விட்டு சென்றுள்ளார்.

அப்போது, கொட்டகையில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மாலையில் மீண்டும் காரில் வீட்டிற்கு வந்துள்ளார். காரில் இருந்து இறங்கிய விஜயசாந்தி வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார். பெற்றோர்,உடனடியாக ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து தற்கொலைக்கு காரணம் வரதட்சணை கொடுமையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்டிஓ விசாரணையும் நடக்கிறது.

 

Related Stories: