சென்னை: திராவிட மாடல் அரசின் சாதனைகள் எடப்பாடி பழனிசாமியின் கண்களை உறுத்திக் கொண்டு இருக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட கோயில்கள் சார்பில் 32 இணைகளுக்கு திருமணத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து, பரிசுப் பொருட்கள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது: இன்றைக்கு சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இல்வாழ்க்கையில் இணைய இருக்கிற 193 இணையர்களுக்கு இன்றைக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. கடந்த மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையிலே ஒரு முக்கியமான அறிவிப்வை வெளியிட்டார். இந்த ஓராண்டில் மட்டும் அறநிலையத்துறையின் சார்பாக 1000 இணையர்களுக்கு திருமணங்களை நடத்தி வைக்க வேண்டும் என்பதுதான் இலக்கு. அதன்படி, கடந்த ஜூலை மாதம் சுமார் 775 இணையர்களுக்கு திருமணங்களை நடத்தி வைத்தார்.
இன்றைக்கு, இங்கும், தமிழ்நாடு முழுவதும் நடத்தி வைக்கப்படுகிற திருமணங்களின் மூலம், அறநிலையத்துறையின் சார்பில் 1000 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்து இலக்கினை அடைந்து விட்டார். எனக்கு பக்கத்தில் அமர்திருக்கும் இணையர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். மணமகனின் பெயர் சந்தோஷ், மணமகளின் பெயர் லட்சுமி. சந்தோஷிடம் எப்படிப்பா பெண்ணை தெரியும் என்று கேட்டேன். நான் நினைத்திருந்தது போலவே, அவர் தனக்கு காதல் திருமணம் என்று தெரிவித்தார். எப்படிப்பா பழக்கம் என்று கேட்டேன்.
ஒரு வருடமாக ஒரே இடத்தில் வேலை செய்கிறோம் என்று தெரிவித்தார். மிகுந்த மகிழ்ச்சி. ஏனென்றால் காதல் திருமணத்தில் இருக்கின்ற பிரச்னைகள் அனைத்தும் எனக்கும் தெரியும். எனக்கும் காதல் திருமணம்தான். முதலில் பெண் ஒத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நிறைய கஷ்டப்பட வேண்டும். பிறகு பெண்ணின் அப்பா, அம்மா ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களை சமாதானப்படுத்த வேண்டும். அதற்கு அடுத்து பெண்ணின் மாமா, சித்தப்பா என்று எல்லோரும் கிளம்பி வருவார்கள். ஏதாவது ஒரு பிரச்னையை இழுத்து விடுவார்கள்.
அவர்கள் அனைவரது சம்மதத்தையும் வாங்கிய பிறகு, பெண் முடியாது என்று மறுத்துவிடுவார். இப்படி ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. அந்த பிரச்னைகளையெல்லாம் சமாளித்து, இன்றைக்கு இந்த திருமணங்கள் நடக்கின்றன. இன்று நடக்கின்ற திருமணங்களில் பெரும்பாலான திருமணங்கள் காதல் திருமணங்கள்தான். எனவே இது அறநிலையத்துறையா, அன்பு நிலையத்துறையா என்கின்ற வகையில் அவ்வளவு காதல் திருமணங்களை அமைச்சர் சேகர்பாபு நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த இணையர்களை பார்க்கும்போது, மிகுந்த மகிழ்ச்சி. எல்லோருமே நன்கு படித்துள்ளார்கள், அது கூடுதல் மகிழ்ச்சியை தருகின்றது. 50, 60 வருடங்களுக்கு முன்பெல்லாம் இது சாத்தியமில்லை. மணமக்கள் உங்களுடைய அப்பா – அம்மா அல்லது தாத்தா பாட்டியின் திருமண பத்திரிகைகளை எடுத்துப் பார்த்தால், அதில் அவர்கள் படித்து வாங்கிய பட்டம் இருக்காது. மாறாக சமுதாய பெயர், அவர்களுடைய சாதிபேர் தான் இருந்திருக்கும். ஆனால், இன்றைக்கு சாதி பெயர்கள் இருப்பதில்லை.
மணமக்கள் படித்து வாங்கிய பட்டங்களின் பெயர்கள்தான் இருக்கின்றன. இந்த பெருமை தமிழ்நாட்டிற்கு மட்டும்தான் இருக்கிறது. இதற்கு காரணம், நமது திராவிட இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தான். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் நடத்திய பல்வேறு போராட்டங்களின் காரணமாகத்தான், இத்தனை சீர்திருத்தங்களும் தமிழ்நாட்டிற்கு இன்றைக்கு வந்து இருக்கிறது.
அமைச்சர் சேகர்பாபு பொறுப்பு வகிக்கும் இந்து சமய அறநிலையத்துறை மிகச்சிறப்பாக செயல்பட்டுட்டு கொண்டிருக்கின்றது. இந்த நான்கரை வருடங்களில் மட்டும் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 700 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டு இருக்கிறது. ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்களுக்கு சொந்தமான 8 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு இருக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் மூலம் 29 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, சென்னை கொளத்தூர், திருச்செங்கோடு, ஒட்டன்சத்திரம், விளாத்திக்குளம் ஆகிய இடங்களில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அறநிலையத்துறையின் மூலமாக முதலமைச்சர் திறந்திருக்கிறார். ஏழை – எளிய பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று இந்த கல்லூரிகளை திறந்தால், கோயில் நிதியில் எதற்காக கல்லூரி திறக்குறீங்கன்னு என்று ஒருவர் தொடர்ந்து கேட்டு வருகிறார்.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறநிலையத்துறையின் நிதியை குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்தக் கூடாது, இது எப்படி நியாயம் என்று கேட்கிறார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று வழக்குப் போட்டார்கள். ஆனா, கோர்ட், அறநிலையத்துறையின் பணம் மக்களுக்குத்தான் சொந்தம். அதனை கல்விக்கு உபயோகப்படுத்தலாம் என்று அனுமதித்துள்ளது. இன்றைக்கு அறநிலையத்துறையின் சார்பில் இவ்வளவு திருமணங்கள் நடக்கின்றன. இதற்கும் அவர் கோபித்துக் கொள்ளக் கூடும்.
அறநிலையத்துறை நிதியில் மணமக்களுக்கு எப்படி திருமணம் செய்து வைத்தீர்கள் என்று கோபித்துக் கொண்டாலும், கொள்வார். கேள்வி எழுப்பினாலும் எழுப்புவார். அப்படிப்பட்ட நிலைமையில்தான் இன்று எதிர்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. திராவிட மாடல் அரசின் சாதனைகள் அவருடைய கண்களை உறுத்திக் கொண்டு இருக்கின்றன.
சுயமரியாதை உணர்வுடன் உங்கள் திருமண வாழ்க்கையை வாழுங்கள். உரிமைகளை கேட்டுப்பெறுங்கள். உங்களுக்கு பிறக்கின்ற குழந்தைக்கு, ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தைகயாக இருந்தாலும், அழகான தமிழ்ப்பெயரைச் சூட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
