திண்டிவனம்: தைலாபுரம் தோட்டத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் இன்று நடக்க உள்ள நிலையில் திண்டிவனத்தில் அன்புமணி, நடைபயணத்ைத மேற்கொள்கிறார். இது பாமகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகார மோதல் நீடித்து வரும் நிலையில், அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தரப்பு பொதுக்குழுவில் 16 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
அதற்கு விளக்கம் கேட்டு அன்புமணிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. பதில் அளிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்த நிலையில், இதுவரை அன்புமணி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் இன்று ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் தைலாபுரத்தில் நடக்கிறது. இக்கூட்டத்தில் அன்புமணி பதில் அளிக்காதது குறித்து விவாதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படலாம் எனதெரிகிறது.
மேலும் நாளை பாமக மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. இதன்பின் 3ம் தேதி மாநில தலைமை நிர்வாக குழு கூடுகிறது. இந்த கூட்டங்களில் அன்புமணி செயல்பாடு குறித்து விவாதித்து, ஒழுங்கு நடவடிக்கை குழு அவர் மீது எடுக்க உள்ள நடவடிக்கைகளை விளக்கி ஒப்புதல் பெறப்படும் என தெரிகிறது. முதல்கட்டமாக பாமக செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்படலாம் எனவும், அந்த இடத்துக்கு ராமதாசின் மூத்த மகள் காந்தி நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில் இன்று (1ம் தேதி) திண்டிவனத்தில் உரிமை மீட்க, தலைமுறை காக்க என்ற தலைப்பில் அன்புமணி நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளார். இன்று காலை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை மற்றும் நந்தன் கால்வாயை பார்வையிடுகிறார். மாலையில் திண்டிவனத்தில் ராமதாசின் சொந்த வீடு அமைந்துள்ள (இந்த வீட்டில் தான் ராமதாசின் மூத்த மகள் காந்தி வசித்து வருகிறார்) காமாட்சியம்மன் கோயில் அருகே தாலுகா அலுவலக சந்திப்பிலிருந்து தொண்டர்களுடன் நடைபயணமாக சென்று வண்டிமேடு திடலில் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். பின்னர் செஞ்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
ராமதாசின் சொந்த ஊரான திண்டிவனத்தில் அன்புமணி தனக்குள்ள செல்வாக்கை நிரூபிக்கும் வகையில், பெரும் கூட்டத்தை கூட்ட கட்சியினரிடம் அறிவுறுத்தியதால், மற்ற இடங்களை விட இங்கு அவரது ஆதரவாளர்கள் முக்கியத்துவம் கொடுத்து தீவிர ஏற்பாடு செய்து வருகின்றனர். ஒரே நாளில் திண்டிவனத்தில் அன்புமணியின் நடைபயணமும், தைலாபுரத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டமும் நடப்பதால் பாமகவில் பரபரப்பு நிலவி வருகிறது. இதனால் தைலாபுரத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை-ராமதாஸ் முடிவு
பாமக மாநில சமூக ஊடகப் பேரவை கூட்டம், ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் நேற்று நடந்தது. பின்னர் அதன் ஒருங்கிணைப்பாளர் சோழகுமார் வாண்டையார் கூறுகையில், அரசியல் ரீதியான விமர்சனங்களை நாகரிகமாகவும், நியாயமாகவும் கையாளும்படியும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்களை சமூக வலைதளம் மூலமாக எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் ராமதாஸ் அறிவுறுத்துள்ளார். 16 குற்றச்சாட்டுகள் குறித்து அன்புமணி இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழுவினரும், ராமதாசும் முடிவு செய்வார்கள் என்றார்.
