இதுவரை 12,152 கோயில்களில் ரூ.6,980 கோடியில் 27,563 திருப்பணிகளுக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை, ஆணையர் அலுவலகத்தில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தில் நேற்று கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டிட கொளத்தூர் சோமநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தினை 25 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதோடு, கல்வி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை தேவை என்று உலகிற்கு உணர்த்திய உச்சநீதிமன்றத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் இதுவரை 3,503 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் சாதனையாகும். இந்த அரசு பொறுப்பேற்றபின், 12,152 திருக்கோயில்களில் ரூ.6,980 கோடி மதிப்பீட்டிலான 27,563 திருப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அதில் ரூ.3,843 கோடி மதிப்பீட்டிலான 14,594 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. உலகிலேயே உயரமான முருகன் சிலைகள் மருதமலையிலும், ஈரோடு மாவட்டம், திண்டலிலும், ராணிப்பேட்டை மாவட்டம், குமரகிரியிலும் அமைத்திட ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்கீழ் 29 அர்ச்சகர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தங்க முதலீட்டு திட்டத்தின் மூலம்21 திருக்கோயில்களில் பயன்பாடற்று இருந்த பலமாற்று பொன் இனங்கள் ஓய்வுபெற்ற நீதியரசர்கள் முன்னிலையில் பிரித்தெடுக்கப்பட்டு ஒன்றிய அரசின் உருக்காலையில் உருக்கி பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டு திட்டத்தில் 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லி கிராம் சுத்த தங்கம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டொன்றிற்கு வட்டித்தொகையாக ரூ.17.81 கோடி கிடைக்கப்பெறுகிறது. 13 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 764 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு மேலும் 2 திருக்கோயில்களில் நாள்முழுவதும் அன்னதானத் திட்டமும், 6 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானத் திட்டமும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார். இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்தர், கூடுதல் ஆணையர்கள் பழனி, ஜெயராமன், மங்கையர்க்கரசி, சிறப்பு பணி அலுவலர் லட்சுமணன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: