திருச்சி: தன்னை தற்காத்து கொள்வதற்காக தான் பாஜவுடன் எடப்பாடி கூட்டணி வைத்துள்ளார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மேலப்புதூர் புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அப்போது அவர் அளித்த பேட்டி:
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் துறையூர் சுற்றுப்பயணத்தின் போது, ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்டது நியாயமற்றது, கண்டிக்கத்தக்கது. அந்த கூட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அழைத்ததன் பேரில் தான் அங்கு ஆம்புலன்ஸ் சென்றது. அரசு நிகழ்ச்சியாக இருந்தால் கூட முதல்வர் உரையாற்றினாலும் ஆம்புலன்ஸ் வந்தால் உடனடியாக கூட்டம் அப்புறப்படுத்தப்பட்டு வழிவிட்டு வருவது திமுக அரசு.
திமுக அரசு தான் வேண்டுமென்றே ஆம்புலன்சை கூட்டத்துக்குள் அனுப்புகிறது என எதிர்க்கட்சி தலைவர் விமர்சிப்பதில் உண்மை தன்மை இல்லை. அவர்கள் கூட்டம் நடத்தும் பகுதிகளில் எந்த இடர்பாடுகளும் எங்களால் அளிக்கப்படவில்லை. அனைத்தையும் மக்கள் கூர்ந்து நோக்கி கொண்டிருக்கின்றனர். வரும் தேர்தலில் சரியான தீர்ப்பையும் அளிப்பார்கள். பஞ்சப்பூரில் எனக்கு 300 ஏக்கர் இடம் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அவ்வாறு எனக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் பஞ்சப்பூரில் இடம் இருந்தால் அதை மாவட்ட நிர்வாகமே எடுத்து கொள்ளலாம். எடப்பாடி பழனிசாமியும் எடுத்து கொள்ளட்டும். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தன்னை தற்காத்து கொள்வதற்காகவே பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளார். எதிர்வரும் மழைக்காலத்துக்கான முன்னேற்பாடு நடவடிக்கை முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். எனது பதவியை காப்பாற்றி கொள்வதற்காக முதல்வர் குடும்பத்துடன் இணக்கமாக இருக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறுவது எனக்கு நற்சான்றிதழ் அளிப்பது போலத்தான். தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தான் நடந்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
