அரவக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ. கலிலூர் ரகுமான் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: அரவக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ. கலிலூர் ரகுமான் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்; அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் கலிலூர் ரகுமான் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். 2006-ஆம் ஆண்டு அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.கழக. வேட்பாளராகப் போட்டியிட்டு, பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்ற கலிலூர் ரகுமான் தனது சிறந்த பணியால் தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்று விளங்கியதோடு, சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையைப் பெற்றவராகவும் திகழ்ந்தார்.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்த கலிலூர் ரகுமான், பள்ளப்பட்டி பேரூராட்சித் தலைவராகவும் இருமுறை பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வகித்த பொறுப்புகளில் எல்லாம் திறம்படச் செயல்பட்ட அவரது மறைவு அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கும், தமிழ்நாடெங்குமுள்ள சிறுபான்மைச் சமூகத்தினருக்கும் பெரும் இழப்பாகும். அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், பொதுமக்கள், கழக உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: