பெண்ணின் இதயத்திலிருந்து தையல் ஊசியை அகற்றி சாதனை: மதுரை ஜி.ஹெச் டாக்டர்கள் அசத்தல்

மதுரை: நாகையை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் இருதயத்தில் குத்தி இருந்த தையல் ஊசி அகற்றப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அருகே மீனம்பநல்லூரை சேர்ந்தவர் புவனேஸ்வரி(30). ஆக.18ம் தேதி தனது வீட்டில் உள்ள பரணிலிருந்து பொருள்களை எடுத்து கீழே வைத்துக் கொண்டு இருந்தார். அப்போது தவறி கீழே விழுந்தார். இதில் தரையில் கிடந்த நீளமான ஒரு தையல் ஊசி நெஞ்சில் குத்தி இருதயம் வரை சென்றது. எனினும் அந்த பெண் உடனடி மருத்துவ சிகிச்சை பெறாமல், வெளியூர் சென்ற கணவர் வருவதற்காக காத்திருந்தார்.

இரு நாட்கள் கழித்து அவருக்கு மூச்சுத்திணறலுடன், நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கடந்த 20ம் தேதி சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி செய்து, சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. இதில் நெஞ்சின் வழியாக இருதயம் வரை தையல் ஊசி குத்தி இருந்தது கண்டறியப்பட்டது. இதை கண்ட குடும்பத்தினர், டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதில் அந்த பெண் அபாய நிலைக்கு சென்றதால், மதுரை அரசு மருத்துவனைக்கு பரிந்துரைத்து, மேல் சிகிச்சைக்கு ஆக.21ல் அனுப்பி வைத்தனர்.

இதன்பேரில் மதுரை அரசு மருத்துவமனையில் ஆக.21ல் எக்கோ ஸ்கேன் செய்ததில் இருதயத்தை சுற்றி நீர் இருந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக இருதய நெஞ்சக அறுவை சிகிச்சைத்துறையில் அனுமதிக்கப்பட்டு, அன்றே இதயத்துறை டாக்டர்கள் குழுவினர் அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதில் மிக லாவகமாக நுணுக்கமான பணியினால், நவீன அறுவை சிகிச்சை கருவிகள் துணையுடன் இருதயத்திற்குள் சொருகி இருந்த தையல் ஊசி அகற்றப்பட்டது.

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறும்போது, ‘தென்பகுதியில் இருதய அறுவை சிகிச்சைக்கான சகல வசதிகளையும் மதுரை அரசு மருத்துமவனை பெற்றுள்ளது. எனவே, அறுவை சிகிச்சையை முடித்து நோயாளி எந்த பக்க விளைவுமின்றி நலமாக உள்ளார். ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’’ என்றனர். மிகக் கவனத்துடனும், விரைவாகவும் செயல்பட்டு, அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து பெண்ணின் உயிர் காத்த இருதய அறுவை சிகிச்சைத்துறை டாக்டர்களை, மதுரை அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஸ்குமார், நிலைய மருத்துவ அதிகாரிகள் சரவணன், முரளிதரன், மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Related Stories: