மூத்த மகன் திருமண தகராறில் ஆத்திரம் மனைவி, மகனை தீ வைத்து எரித்துக் கொன்ற தந்தை: தானும் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி

நெல்லை: மூத்த மகன் திருமணம் தொடர்பான தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில், மனைவி மற்றும் இளைய மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, தானும் தீக்குளித்த தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில், தாய் மற்றும் மகன் உயிரிழந்தனர். தந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் ஆரைகுளத்தை சேர்ந்தவர் சகாரியா (66). இவரது மனைவி மெர்சி (57), இளைய மகன் ஹார்லி பினோ (27). இவர்களது வீட்டில் இருந்து நேற்று மதியம் கரும்புகை வெளியேறியதுடன் அலறல் சத்தமும் கேட்டுள்ளது.

அக்கம் பக்கத்தினர் தகவலின்படி பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் வந்து, வீட்டிற்குள் சென்று தீயை அணைத்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சகாரியா, மெர்சி, ஹார்லி பினோ ஆகிய மூவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே மெர்சியும், ஹார்லி பினோவும் உயிரிழந்தனர். சகாரியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியானது. சகாரியா-மெர்சி தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். இதில் மகள் திருமணமாகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார். இவர்களது மூத்த மகன் ஹென்றிக்கும் (30) அவரது உறவினரின் பெண்ணுக்கும் கடந்த 21ம் தேதி திருமணம் நடந்தது. இதில் தந்தை சகாரியாவுக்கு விருப்பம் இல்லை.

இதனால் அவர் திருமணத்திற்கு செல்லவில்லை. மனைவி மற்றும் இளைய மகனிடமும் தெரிவித்துள்ளார். அதனை மீறி தாயும், இளைய மகனும் மற்றும் மகளும் திருமணத்தில் பங்கேற்றனர். இதனால் ஆத்திரமடைந்த சகாரியா, அவர்களுடன் பேசாமல் ஓட்டலில் சாப்பிட்டு அருகேயுள்ள மற்றொரு வீட்டில் தனியாக வசித்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் கொடியில் காயப்போட்டு இருந்த துணிகளை தாயும், மகனும் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த சகாரியா, இருவரையும் தரதரவென்று இழுத்து சென்று தான் வசித்த வீட்டிற்குள் தள்ளினார். பின்னர் இருவர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு அவர்கள் தப்பிச் செல்ல முடியாதபடி கதவை வெளியே தாளிட்டுள்ளார். அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தமிட்டனர். பின்னர் சகாரியாவும் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். புது மண தம்பதியான ஹென்றியும் அவரது மனைவியும் நேற்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்ற போது இந்த கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories: