சென்னை: மதுரையைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (65). அதிமுக அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவராக பதவியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயச்சந்திரன், நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து மதுரைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்வதற்காக, சென்னை விமான நிலையம் வந்தார். விமானத்தில் ஏறி, இவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 19 சி இருக்கையில் அமர்ந்தார். விமானம் புறப்படுவதற்கு முன்னதாக, விமான பணிப்பெண்கள் பயணிகள் தலைக்கு மேலே லக்கேஜ்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளை மூடினர்.
அப்போது ஜெயச்சந்திரன் லக்கேஜை எடுத்து, வேறு இடத்தில் வைத்தனர். இதற்கு ஜெயச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். ஏன் இடம் மாற்றி வைக்கிறீர்கள் என்று கேட்டார். இதைத்தொடர்ந்து ஜெயச்சந்திரனுக்கும் விமானப் பணிப் பெண் களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து விமான பணிப்பெண்கள், விமானியிடம் இதுகுறித்து புகார் செய்தனர். உடனே விமானி பயணி ஜெயச்சந்திரனை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என்று கூறி, அவரை ஆப் லோடு செய்து, விமானத்திலிருந்து கீழே இறங்கும்படி கூறினார்.
ஆனால் ஜெயச்சந்திரன், நான் என்ன தவறு செய்தேன். எதற்காக என்னை ஆப்லோடு செய்திருக்கிறீர்கள் என்று கேட்டு தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்பு இண்டிகோ ஏர்லைன்ஸ் செக்யூரிட்டி ஆபீசர்கள் வந்து, பயணி ஜெயச்சந்திரனை விமானத்தில் இருந்து கீழே இறக்கினர். அதன்பின்பு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக, சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றது.
இதற்கிடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் மேனேஜர், இதுகுறித்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்திற்கு புகார் செய்தார். அதோடு பயணி ஜெயச்சந்திரன் விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் ஜெயச்சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர். இரவு 9 மணி வரையில் ஜெயச்சந்திரன் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். அதன்பின்பு போலீசார், ஜெயச்சந்திரனிடம் எழுதி வாங்கிக்கொண்டு, அவரை காவல் நிலையத்தில் இருந்து விடுவித்தனர்.
