சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம் சந்திரகுடி அருகே வேப்ப மரத்தின் அடியில் தனது தாயாரோடு சேர்ந்து விதைகளைச் சேகரித்துக் கொண்டிருந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அஸ்பியா பானு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் சபிக்கா பானு ஆகியோர் மின்னல் தாக்கியதால் உயிரிழந்தார்கள் என்கிற செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
எதிர்காலத்தில் வளர்ந்து திறம்படச் செயலாற்ற வேண்டிய இளம் குருத்துகள் இயற்கையின் சூழலால் கருகிப் போய் இருப்பது அந்த பகுதியை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த பிஞ்சுகளை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து அந்த குடும்பத்திற்கு உதவி வழங்க வேண்டும். குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
