புதுடெல்லி: குலசேகரப்பட்டினத்தில் இருந்து அடுத்த ஆண்டு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார். இரண்டாவது தேசிய விண்வெளி தினம் நிகழ்ச்சி டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தலைமையில் நடந்தது. இதில் விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். முக்கிய விருந்தினராக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கலந்து கொண்டார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதில், ‘‘இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் உலக அளவில் தற்போது முன்னணியில் உள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் 100 செயற்கைகோள் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட உள்ளது. விண்வெளி தொடர்பாக அதிஉயர்மட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பிற நாடுகளோடு கூட்டு சேர்ந்து செய்வதே நல்லது ஆகும். வரும் 2037ம் ஆண்டில் இந்தியா தனியாக ஒரு விண்வெளி நிலையத்தை கண்டிப்பாக அமைக்கும்.
இந்தியா தனக்கு சொந்தமாக ‘‘நேவிகேஷன் சிஸ்டத்தை” முழுமையாக உருவாக்க ஏழு செயற்கைகோளை நிலைநிறுத்த வேண்டும். தற்போது மூன்று செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. வரும் காலத்தில் இந்த விவகாரத்தை வெற்றிகரமாக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இருந்து வரும் 2026 டிசம்பர் மாதம் அதாவது அடுத்த ஓராண்டில் விண்வெளிக்கு ராக்கெட் ஏவப்படும். அதற்கான பணிகள் துரித கட்டமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
* ஆழமான விண்வெளி ஆய்வுக்கு தயாராகுங்கள்
பிரதமர் மோடியின் வீடியோ உரையில், ‘‘மனித குலத்தின் எதிர்காலத்திற்கு பயனளிக்கும் பல ரகசியங்கள் மறைந்திருக்கும் ஆழமான விண்வெளியை நாம் எட்டிப்பார்க்க வேண்டும். விண்மீன் திரள்களுக்கு அப்பால் நமது எல்லைகள் உள்ளன. முடிவில்ல பிரபஞ்சம் எந்த எல்லையும் இறுதி எல்லை அல்ல. விண்வெளித்துறையிலும், கொள்கை மட்டத்தில், இறுதி எல்லை இருக்கக்கூடாது என்று நமக்கு சொல்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
