பெரியாறு அணையில் பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட புதிய படகிற்கு விரைவில் நிதி ஒதுக்கிட வேண்டும்

*தமிழக அரசுக்கு விவசாய சங்கங்கள் கோரிக்கை

கூடலூர் : தமிழகத்தின் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாடு ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் நீர் பாசனம் மற்றும் மக்களின் குடிநீர் நீர் ஆதாரமாகவும் உள்ள பெரியாறு அணை கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இருந்தாலும், அணையின் பராமரிப்பு மற்றும் நீரினை பயன்படுத்தும் உரிமை 999 ஆண்டுகால குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் வசம் உள்ளது.

பெரியாறு அணையின் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொள்ள தமிழக பொதுப்பணித்துறையினர் பயன்படுத்த இரண்டு படங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளா தரப்பில் பல்வேறு துறைகளில் சார்பில் 18 படகுகளுக்கு மேல் பயன்படுத்தப்படுகின்றன.

பெரியாறு அணையில் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் இயக்கப்பட்ட நான்கு படகுகளில் ப்ளூ பெல், மங்கையர்கரசி ஆகிய இரண்டு படகுகளும் செயல் இழந்துவிட்டன. தற்போது தமிழக பொதுப்பணித் துறையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் 27 குதிரை திறன் கொண்ட ஜல ரத்னா படகு 1984ம் ஆண்டும், கண்ணகி படகு 1986ம் ஆண்டும் பயன்பாட்டிற்கு வந்த இரண்டு படகுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் 2014ம் ஆண்டு தமிழக பொதுப்பணித்துறையினர் பராமரிப்பு கண்காணிப்பு பணிக்காக பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்ட தமிழன்னை படகை பல்வேறு தொழில்நுட்ப காரணங்களை கூறி அதனை இயக்க விடாமல் கேரளா அரசு தடுத்து வருவதால் கடந்த 11 ஆண்டுகளாக தமிழன்னை படகு இயக்கப்படாமல் தேக்கடி படகு துறையில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதை தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள், அமைப்புகள் கண்டித்து வருகின்றன. தமிழன்னை படகை இயக்குவதற்கும் கூடுதலாக ஒரு படகை தமிழக பொதுப்பணி துறையினர் பயன்படுத்துவதற்கும் தமிழக அரசு மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முன்னெடுப்பு காரணமாக 47 குதிரை திறன் வேகம் கொண்ட புதிய படகை ஒன்றை தமிழக பொதுப்பணி துறையினர் பயன்படுத்திக் கொள்ள கேரளா அரசு அனுமதி வழங்கியுள்ளது. சுமார் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கொண்டுவரப்பட்ட உள்ள புதிய படகிற்கு தமிழ்நாடு அரசு விரைவில் நிதி ஒதுக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும் ஒரு 47 குதிரை திறன் கொண்ட ஸ்டீல் போட் ஒன்றிற்கும் கேரளா அரசிடம், தமிழக நீர்வளத் துறையினர் அணையில் பயன்படுத்துவதற்கான அனுமதியை முறைப்படி கோரியுள்ளனர். அதற்கான அனுமதியும் கிடைக்கும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழன்னை படகை இயக்க கோரிக்கை:மேலும் இது குறித்து பெரியாறு – வைகை பாசன விவசாய சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில்,தமிழக பொதுப்பணித்துறையினர் பயன்பாட்டிற்காக 2014ல் 130 ஹெச்பி திறன், இரண்டு டன் எடை வரை பொருட்களை எடுத்துச் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட ஸ்டீல் போட் தமிழன்னை படகு கொண்டுவரப்பட்டது. ஆனால், 2014ம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் தமிழன்னை படகு உரிய கண்டிஷனில் உள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

கேரளா அரசின் பல்வேறு துறைகள் சார்பாக பெரியாறு அணையில் 18 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே தேவையை அறிந்து அணையில் முடங்கி கிடக்கும் தமிழன்னை படகை தமிழக பொதுப்பணி துறையினர் பயன்படுத்துவதற்கு தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழன்னை படத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1 கோடியை தாண்டும். மேலும் தமிழன்னை படகில் இன்ஜின் உள்ளே அமைக்கப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் மாசுபடாமலும் வனவிலங்குகளுக்கு இடையூறு இல்லாமலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு வரை கொச்சியில் உள்ள கேரளா போட் அத்தாரிட்டி மூலம் தமிழன்னைப் படகை இயக்குவதற்கு தடையில்லா சான்று பெற்று எப்பொழுதும் இயக்கம் நிலையில் இருக்கிறது. இன்னும் தமிழன்னை ஸ்டீல் படகு என்பதால் பேரிடர் காலங்களில் பயனுள்ளதாக இருக்கும். எனவே தமிழன்னை படகை பெரியாறு அணையில் இயக்கிட உரிய நடவடிக்கை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

 

Related Stories: