*தூத்துக்குடி ஆஸ் மூவர்ஸ் அசோசியேசன் தீர்மானம்
ஸ்பிக்நகர் : உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள 350க்கும் மேற்பட்ட உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் தொழில் தொடர்பாக சிமெண்ட் ஆலைகள், கனரக வாகனங்கள் பராமரிப்பு ஆகிய தொழில் சார்ந்த வல்லுநர்கள் ஆலோசனை வழங்கினர்.
பின்னர் சங்க தலைவர் ராஜ்குமார், பொருளாளர் தினகரன் ஆகியோர் கூறுகையில், தூத்துக்குடியில் டிடிபிஎஸ், என்டிபிஎல் மற்றும் தனியார் அனல் மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கிடைக்கும் உலர் சாம்பல் ஆரம்ப காலத்தில் இலவசமாக கொடுக்கப்பட்டு வந்தது.
பிறகு டெண்டர் முறையில் வழங்கப்பட்டது. உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பதற்கு மிகவும் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. இந்த உலர் சாம்பல் தொழிலை துவங்குவதற்கு முதலில் மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு உதவியாக இருந்து ஊக்குவித்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு உலர் சாம்பல் செங்கல் தயாரிக்கும் இடங்களிலும் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
சில தனியார் அனல் மின்நிலையங்களில் ஒப்பந்தம் மூலமாக உலர் சாம்பல் வழங்கப்படுகின்றன. இதனால் மானிய விலையில் கிடைத்த உலர் சாம்பல் அதிக விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் செங்கல் தயாரிக்கும் தொழிலில் தொய்வு ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனல் மின் நிலையங்களில் இருந்தும் 40% வரையிலான உலர் சாம்பலை உள்ளூரில் செங்கல் தயாரிக்கும் தொழில் செய்து வருபவர்களுக்கு கிடைக்கும் படியாக நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என்றனர்.
